2.3.11

ஆடுகளம் - தமிழில் ஓர் உலக சினிமா!!!


டுகளம் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படம், வெற்றிமாறன் உலக அளவில் மதிப்பிடப்படும் தரமான தமிழ் சினிமாவின் நம்பிக்கை ஒளி . பொல்லாதவனுக்கும் ஆடுகளத்துக்கும் இடைப்பட்ட மூன்று வருடத்தில் இவர் நிச்சயம் நிறைய வீட்டுப் பாடங்கள் செய்திருப்பார் என நம்பினேன், அது பொய்க்கவில்லை. மேலும் ஒரு இயக்குனருக்கு இரண்டாவது படம் மரணக்கிணறு போன்றதாகும். நல்ல கதைக்களமும் சிறப்பான தொழில்நுட்பம் சார் இயக்கமும் இருந்தால் தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்னும் அக் கிணற்றைத் தாண்ட முடியும். ஏனைய இயக்குனர்கள் வித்தியாசமாக படம் செய்யவேண்டும், புதிதாக செய்ய வேண்டும் என்று சிந்திக்கத் துவங்கி, படத்துக்கான கருவை தன்னுள் தேடாமல் காற்றில், குறுந்தகட்டில் அந்நிய திரைப்படங்களில் தேடுவர். அதை அப்படியே தூக்கி தமிழ் சினிமாவுக்காக மாற்றி களவாடுவர். அது பல சமயம் பிள்ளையார் பிடிக்கபோய் குரங்கான கதை தான்!!!.

ஆனால்,வெற்றிமாறன் இரண்டாம் படத்திலும் தன் முத்திரையை ஆழமாக பதித்துள்ளார். இந்திய சினிமா வரலாற்றிலேயே படத்தின் கதை வடிவமைக்க உந்துதலாய் அமைந்த திரைப்படங்களின் பெயர்களைப் போடுகிறார் பாருங்கள். அது மிக மிக அரிய பண்பு. தனக்கு சொந்த மண்ணின் கதையான சேவல்சண்டையை படமாக்க உந்துதல் அளித்தது அமெர்ரோஸ் பெர்ரோஸ்ஸின் நாய்ச்சண்டை தான் என்கிறார். பொல்லாதவன் திரைப்படத்தை நான் எத்தனை முறை பார்த்தேன் என்றே தெரியாது . வெற்றிமாறன் சிரியஸாக பேரலல் சினிமா எடுப்பேன் என கிளம்பி பணம் போட்ட தயரிப்பாளரை இதுவரையில் மொட்டையடித்ததில்லை. மெயின் ஸ்ட்ரீம் சினிமா விரும்பிகளுக்கும், பேரலல் சினிமா விரும்பிகளுக்கும் ஏற்ற வகையில் படம் எடுத்து எல்லோரையும் இன்புற்று உய்ய வைத்திருக்கிறார்.

பொல்லாதவன் திரைப்படத்தை ஒருவர் பைசைக்கிள் தீவ்ஸுடன் ஒப்பிட்டால் அது மிகப்பெரிய நகைப்புக்கிடம், ஆது வேறு, இது வேறு, ஆடுகளமும் எதனுடனும் ஒப்பிட முடியாத ஒரு ஆகச்சிறந்த படைப்பு!!!. எம்.டி வாசுதேவன் நாயர். மகேந்திரன், பாரதிராஜா, பாலுமகேந்திரா, பரதன், பாலா போன்றவர்களின் படைப்புகளுக்கு அடுத்து காலத்துக்கும் பேசப்படக்கூடிய படைப்பு . நிறைகுடம் தளும்பாது குறைகுடம் கூத்தாடும் என்பதற்கேற்ப , இயக்குனர் வெற்றி மாறன் தலைக்கனமாக பேசி நான் இதுவரை பார்த்ததில்லை. ஆனால் அவர் படைப்புகள் அவருக்காக பேசும். உணர்வு ரீதியாக திரைப்படங்கள் வடிக்கும் பாலாவின் புதிய படம் அவன் இவன் , அது ஆடுகளம் உண்டாக்கிய தாக்கத்தை தரவேண்டும், தந்துவிடுமா?!!! என நினைக்கத் தோன்றுகிறது. ஆடுகளத்தில் அவ்வளவு சக்திவாய்ந்த பாத்திரங்கள் வெற்றிமாறன் உருவாக்கியது, அவற்றை நிஜத்தில் உலவவிட்டது, அதை செலுலாய்டு அற்புதம் என்பேன்.

இது நாயகனுக்காக பின்னப்பட்ட கதை அல்ல, கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமுமே நாயகர்களாக தம்மை முன்னிறுத்திக் கொள்பவர்கள் தான், அவர்களின் அன்றாட வாழ்க்கை, அவர்களுக்கு மத்தியில் குறுக்கிடும் சேவல்சண்டை, அதனுடன் பின்னிப்பிணைந்த காதல், நட்பு, பாசம், அன்பு, வெற்றி, தோல்வி, புகழ், கவுரவம், துரோகம், இரட்டைவேடம் வஞ்சம் என அன்றாடம் காய்ச்சி மனிதர்கள் நாம் வேடமிட்டு அரங்கேற்றிக்கொள்ளும் சம்பிரதாய நாடகங்களே!!!,

படத்தின் இறுதியில் சில புதிர்களை நமக்கு பொதித்து வைக்கிறார் இயக்குனர். குரு-பேட்டைக்காரன் சிஷ்யன் கருப்புவின் கண்முன்னால் கத்தியால் தன் கழுத்தை அறுத்துக் கொண்டு சரிகிறார். அது ஏன்?, குட்டு வெளிப்பட்டதே என வெட்கப்பட்டு கூசியவர் மனம் திருந்தி கழுத்தை அறுத்துக்கொண்டாரா? அல்லது தான் இறந்த பிறகும் கூட இந்த கருப்புக்கும் துரைக்குமான வஞ்சம் கொழுந்துவிட்டு எரிய வேண்டும். கருப்பு நடைபிண வாழ்வு வாழவேண்டும், சேவற்கட்டாரியாக புகழ் பெறவேகூடாது என வீம்புக்கென்று கழுத்தை அறுத்துக்கொண்டாரா? யோசித்துப்பார்க்கிறேன். சுவாரஸ்யமான புதிராய் தான் இருக்கிறது.இப்படித்தான் நிஜவாழ்வில் நமக்கு மிக பரிச்சயமான மனிதர்கள் ஏன் அப்படி செய்தார்கள் என கணிக்க முடிவதில்லை.


இறுதியில் கருப்பு தன் குருவுக்கு காணிக்கையாக அவர் இறந்த பிறகும் அவர் புகழுக்கு கேடு நிகழக்கூடாது என்று ஊரைவிட்டே ஓடுகிறார் . ஒரு பக்கம் போலீசும் மறுபக்கம் துரையின் ஆட்களும் தேட, நிராயுத பாணியாக காதலியுடன் ஓடுகிறார். இக்காட்சியிலும் நம்மை சிந்திக்கவித்திருக்கிறார் இயக்குனர். அது ஏன்?..ஓடுகையில் கருப்பு தன் குரு பேட்டைக்காரன் அவர் வீட்டில் பதுக்கிவைத்திருந்த பணம் 2.5 லட்சத்தை தன்னுடன் எடுத்துக்கொண்டு வந்தவர் அதை ஆட்டோவிலேயே விட்டு விட்டு செல்வது தனக்கு பணம் ஒரு பொருட்டல்ல எனக்காட்டவா ?!!! அல்லது தன் குருவின் வீட்டில் அப்பணம் இருந்தால் தன் குரு பேட்டைக்காரன் தான் குற்றவாளி என துரைக்கும் ஊராருக்கும் தெரிந்துவிடுமே எனக்கருதியா?!!! கருப்பு அந்த 2.5 லட்சம் பணத்தை குருவின் பணம்[பேட்டைக்காரன் பதுக்கியதால்] என்று தான் கொண்டு போகாமல் தான் வந்த ஆட்டோவிலேயே விட்டுட்டார் என நினைக்கிறேன். அவர் அதைக் கொண்டு போயிருந்தாலும் எந்த பாதகமில்லை. ஊராரின், போலீசாரின் பார்வையில் அவர் கொலைகாரனே!!!பொல்லாதவனில் பல்சர் பைக்கும் ஒரு பிரதான பாத்திரம்,இதில் அந்த துணிக்கடை பாலீத்தீன் பைக்குள் இருக்கும் பணமும் ஒரு பிரதான பாத்திரம். இயக்குனர் வெற்றிமாறன் தாராளமாக இந்த புள்ளியில் இருந்து ஆடுகளம் பாகம்-2ஐத் துவக்கலாம், அதுவும் வேறு ஒரு கதைக்களத்தில். பில்லா-2, மன்மதன் -2, நடுத்தெரு நாய்கள்-2 என பாகம்-2 எடுக்கையில் இதை தாராளமாக எடுக்கலாம்.


ஓர் சாதாரணத்தை வைத்து அசாதாரணம் படைத்துள்ளார் இயக்குனர். தனுஷ் கருப்புவாக வந்து கல் நெஞ்சங்களையும் கூட கரைத்துவிடுகிறார். படிக்காத ஊதாரி இளைஞன் வேடம் என்றால் இவருக்கு சர்க்கரையாயிறே? !!! சிம்பு போன்ற தன் வயதை ஒத்த நடிப்பு அவமானங்களுக்கு எதிர்மாரான நடிகர் தனுஷ் . பொல்லாதவனில் இவரை பிடிக்காமல் போயிருந்தாலும் இதில் நிச்சயம் பிடித்து விடும். அப்படி கருப்பு கதாபாத்திரத்துக்குள்ளே காணாமல் போயிருக்கிறார். ஒரு காதல் பித்து பிடித்தவன் , குருவின் கடைசி செல்லப்பிள்ளையான சீடன். விதவை அம்மாவுக்கு வாய்த்த தத்தாரிப்பிள்ளை என எத்தனை பரிமாணம் தனுஷுக்கு?!!! . தோழி அய்லினிடம் இந்த இடத்துல ஒரு மவுத்கிஸ் அடிச்சி ஃபினிஷ் பண்ணிக்கலாமா?!!! என்று கேட்பதும், ஐஅம் லவ் யூ, என்பது, அவள் உனக்கு என்ன வேண்டும்? என்றதும் பால்ஸ்!!!பால்ஸ்!!! என்பது, என்ன தொழில் செய்கிறாய்? என ஆங்கிலோ இந்திய மூதாட்டி கேட்க காக் , காக் ஓட்டிங் என்பதும் படு ஆரவாரம், அதுவும் சேவல் சண்டைக்காட்சிகளில் இவர் எதிராளி கட்டாரியிடம் பேசும் நகைச்சுவை கலாய்ப்பு வசனங்கள் அபாரம். தனக்கு தானே பேசும் இளைஞர்களை உங்களுக்கு தெரியுமா?எனக்கு நிறைய பேரைத் தெரியும்.இதில் கருப்புவும் நிறைய கனவுகளை தனக்குள் இருக்கும் ஒருவனிடம் பேசிக்கொண்டே இருக்கிறார்.யதார்த்தம்.


காணொளி
பேட்டைக்காரனாக வந்த ஜெயபாலன், என்னே ஒரு புதுமுகம்?!!! கடவுளே இப்படி ஒரு நடிகரை தமிழுக்கு அறிமுகப்படுத்தியதற்கே வெற்றி மாறனுக்கு கோடி நன்றிகள். இவர் சமகாலத்தின் சிறந்த புதுமுக குணச்சித்திர நடிகர் என்பேன். தமிழில் ஓர் சிறந்த நடிகர் ராஜ்கிரனுக்கு ஆகச்சிறந்த மாற்று கிடைத்துவிட்டார். இவருக்கு ராதாரவி குரல் கொடுத்ததன் மூலம் அவரும் ஓர் அங்கமாகிவிட்டார். அத்தனை பொருத்தம். துரையின் மீது கோபப்பட்டவர், மீனா சாரைப் போகசொல்லு முகத்தைப் பார்க்கவே பிடிக்கலை என்னும் இடமெல்லாம் க்ளாஸ். இந்த தத்ரூபமான ரிசல்ட் வருவதற்கு மாறன் எப்படி உழைத்திருக்க வேண்டும் ?!!! மலைப்பாக இருக்கிறது, பேட்டைக்காரன் சக்கை போடு போடுகிறார். இனி அவர் வேறு எந்த படத்திலும் நடிக்கா விட்டாலும் வாழ்நாள் சாதனைக்கென்று சொல்லிக் கொள்ள இப்படம் ஒன்றே போதும்.


இன்ஸ்பெகடர் ரத்னசாமி பாத்திரம் அபாரம், நரேனுக்கு இன்ஸ்பெகடர் & சேவல்சண்டை கட்டாரி என இரட்டைச்சவாரி. எனக்குத் தெரிந்து இந்த அளவுக்கு யாரும் நிஜ வாழ்வில் நாம் காணும் போலீஸ் போன்றதோர் வேடத்துக்கு இப்படி பொருந்தியதில்லை, எப்படி? காய் நகர்த்தினால் பழைய சேவல்சண்டை கூட்டாளி பேட்டைக்காரன் ,தன்னிடம் மீண்டும் சேவல் சண்டைக்கு வருவான், என்று இவர் போடும் ஒவ்வொரு திட்டமும் தூள். ஒரு கட்டத்தில் சேவல் சண்டையில் பேட்டைக்காரனின் மற்றொரு சிஷ்யன் கருப்புவிடம் தோற்றுவிட்டதும் அதை பேட்டைக்காரனிடமே தோற்றதாய் கருதி சேவல் சண்டையை தலை முழுகுவது அற்புதம். சேவல்சண்டை போட்டிகளில் இப்படி ஒரு குலமானம் பொதிந்திருப்பது எந்த படத்திலும் இப்படி காட்டப்பட்டதில்லை. அவரின் அம்மா, மனைவி, உதவியாக வரும் வழுக்கை மண்டை போலீஸ்[புதுப்பேட்டையில் தனுஷின் அப்பா?] ஏட்டு என ஒவ்வொரு பாத்திரமும் சிறப்பு.

துரையாக வந்த கிஷோர் அதகளம் செய்துள்ளார், இதில் ஆட்டோ சங்கர் போல கெட்டப்பில் கிராப் தலை, இரவல் குரல் அவருக்கு. இதற்கு முன் நம்முள் பதிந்த பொல்லாதவன், வெண்ணிலா கபடிக்குழு, வம்சம் போன்ற படத்தில் பார்த்த கிஷோரின் பாதிப்புகளை அழித்துவிட்டு, புதிய வடிவம் பெற்று துரையாகவே வாழ்ந்திருக்கிறார். ஒரு குருவின் முதன்மை சிஷ்யனுக்கு தனக்குத்தான் எப்போதுமே குருவின் பாராட்டு கிடைக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்பு இருந்துகொண்டே இருக்கும். அதற்கு பங்கம் வந்தால் அவனிடம் கர்வமும் பொறாமையும் குடிகொள்ளும், எவ்வளவு குணவான் ஆயினும் அவனுள் ஆத்திரம் குடிகொண்டால் அவன் புத்தி மட்டமாகிவிடும், அந்த நிலையை படத்தின் பிற்பாதிகளில் மிகச்சரியாக உள்வாங்கி நடித்துள்ளார் இவர். இவருக்கு சமுத்திரக்கனி குரல் கொடுத்ததன் மூலம் சமுத்திரக்கனியும் ஒரு அங்கமாகிவிட்டார். இவரின் மதுரைத்தமிழ் மிகவும் சுத்தம். கருப்பு வாங்கித் தரும் மோதிரத்தை கையில் வாங்கியவர், எதுக்குடா வீண்செலவு? என்று கேட்டு விட்டு அதை வாங்கி போட்டுக்கொண்டு நல்லாருக்குடா, என்று கருப்பை பாசத்துடன் பார்ப்பார். மிகவும் ரசித்தேன். அண்ணன் தம்பியாகவே பழகியவர்கள் கடைசிக் காட்சியில் நிலவொளியில் நிலத்தில் புரண்டு அடித்துக் கொள்ளும் காட்சி நன்றாக எடுக்கப்பட்டிருக்கிறது, கருப்புவின் அம்மாவின் சாவில் உண்மையிலேயே வருத்தத்துடன் வந்துவிட்டு, பேட்டைக்காரனின் திறமைரீதியான ஒப்பீட்டுதலால் கருப்புவின் மீது சடாரென ரஜோகுணம் கொண்டு, அக்ரீமெண்டு போட்டிருக்கு!!! நினைவிருக்குல்ல? சீக்கிரம் போட்டி நடக்கட்டும்!!! என்று கறாராய் சொல்வது எல்லாம் க்ளாஸ்.

பேட்டைக்காரனின் நண்பன் உதவியாளன் அயூப்பாக வந்தவர் பெரிய கருப்ப தேவர், படத்தின் மூன்று முக்கியபாத்திரமான ஆணிவேர் கதாபாத்திரங்கள் பேட்டைக்காரன், ரத்னசாமி பின்னே இவர். மொத்தமே ஐந்து அல்லது எட்டு நிமிடம் தான் காட்டப்படுவார் . ஆனால் பாதி படம் முழுக்க இவரைப் பற்றி பேசுகின்றனர். அதன் மூலம் இவர் சேவல் சண்டைக்கு அளித்த பங்களிப்பை நாம் கண்கூடாக அறிகிறோம். நடக்கப்போகும் தன் மகள் திருமணத்துக்கு சீதனமாய் மோட்டார் பைக்கும் மொத்த திருமணச்செலவையுமே ரத்தினசாமி ஏற்பதாய் சொல்லியும், தடுமாறாமல் 40 வருடகால நட்பே முக்கியம் என்று சீறி விலகும் பாத்திரம். மிக முக்கியமானது.பணத்தால் எல்லோரையும் விலைக்கு முடியாது என சொன்ன பாத்திரம்.

28வயது மூத்த பேட்டைக்காரனுடன் அவரின் சேவல்சண்டை வெற்றிகளை ரசித்து, ஆசைப்பட்டு ஓடிவந்து சேர்ந்து வாழும் மீனாள் பாத்திரம், குறிப்பிடவேண்டிய ஒன்று. இவரின் தவமாய் தவமிருந்து அண்ணி பாத்திரம் கூட மறக்க முடியாதது, நாம் வாழும் சமூகத்தில் அடித்தட்டு வர்க்க மக்களிடையே மனதுக்கு பிடித்திருந்தால் இது போல ஓடிவந்து சேர்ந்து வாழும் சூழல் இருக்கிறது. அதை நம்பும் படி பிரதிபலித்திருக்கிறார். ஒருகட்டத்தில் அதிகம் பிடித்த பேட்டைக்காரன் மீது ,அதீத வெறுப்பு ஏற்பட்டு மண்ணைவாரி தூற்றிவிட்டு, இனிமேலும் நான் இங்கருந்தா எனக்கும் விஷம் வைத்து கொன்னுடுவே!!!!,என்று கதறி அழுது நைட்டியுடனேயே வீட்டைவிட்டு வெளியேறும் காட்சிகள் சிறந்த சான்று.ஒரு ஆணின் சந்தேகம் எந்த அளவுக்கு அவனை விரும்பிய பெண்ணை உடையச்செய்யும் என விளக்கும் பாத்திரம்.

நடுப்பல்லில் சொத்தையுடன் கருப்புவின் வலது கையாய் வரும் நண்பன் ஊளையை குறிப்பிட்டு சொல்லவேண்டும். அதிரடியான கருப்புவுக்கு எதையுமே பகுத்தறிந்து பார்க்கத் தெரியாது , ஆனால்? ஊளைக்கு தெரியும். இரவு 7மணிக்கு எந்த தெருடா வெறிச்சோடியிருக்கு?, தப்பா தெரியுதுடா, பணம் பூராத்தையும் அவர் தான் ஆட்டைய போட்டிருப்பாரோன்னு சந்தேகமாருக்குடா!!!! , எனச் சொல்லி கருப்புவிடம் சத்து சத்தென அடி வாங்குகிறார். நண்பனுடன் நிழலாகவே நடந்திருக்கிறார். தூய நட்பு எதிர்பார்ப்பற்றது, அத்தூய நட்புக்கு சான்று தான் ஊளை பாத்திரம்.

தனுஷின் அம்மாவாக வந்த பெண்மணி சுப்ரமணியபுரத்தின் அழகருக்கு அம்மாவாக வந்த பெண்மணி எனத் தெரிந்தது, அந்த அம்மா மிக மிக இயல்பான பாத்திரம், என் தலைவிதி ஆயுசுக்கும் கோழிப்பீயை அள்ளிச் சுமக்கனும்!!!! என அங்கலாய்க்கும் பாத்திரம். என் அம்மா நினைவுக்கு வந்தது. அம்மா என்பவள் எத்தனை மேலான படைப்பு, தெய்வத்துக்கும் மேலானவள் தாய் என நினைக்கத் தோன்றுகிறது. எப்போதோ இறந்த கணவரின் நினைவை அவர் வாழ்ந்த வீட்டு சுவற்றிலும் தரையிலும் உணர்ந்தவர், அது கணவன் கடன் வாங்கியதால் இன்னும் அடமானத்தில் இருப்பதால் அவ்வீட்டிற்க்கு அடுத்த ஒரு சிறிய ரேழியியையே ஒத்திக்கு எடுத்து குடியிருக்கிறார். இது மதுரையில் நான் நிறைய பார்த்திருக்கிறேன். மதுரையின் மனிதர்கள், ஆடம்பரத்தை வெறுப்பவர்கள். 8 அடி அகலம் 20 அடி நீளம் இருந்தாலே அதில் 2 குடித்தனம் கூட இருக்கும். அந்த ரியாலிட்டிக்காக இதை சொல்லவந்தேன். பேட்டைக்காரன் வசிக்கும் ஊருக்கு வெளியே அமைந்த மலையடிவார வீடும் ஒரு ரியாலிட்டி காட்சியாக்கத்துக்கு சான்று. போலீஸ் ஸ்டேஷன் காட்சிகள், சேவற்சண்டை டோர்னமெண்ட் காட்சிகள். ஃபெளெக்ஸ் சைன் போர்டில் பேட்டைக்காரனுக்கும் துரைக்கும் ரத்னசாமிக்கும் வைக்கப்படும் அரச தோரணை தீம்கள். ஆரவாரமான எதிர்ப்பார்ப்பைக் கூட்டும் சேவற் சண்டை காட்சிகள் என ஒவ்வொன்றும் அருமையாக பார்த்துப் பார்த்து இழைத்த ரகம்.

புறநகர அரசுப்பள்ளியில் படித்து வெளியேறிய மாணவர்களுக்கும் ஏனைய புற நகர் மக்களுக்கும் அடிக்கடி தங்கள் தெருவில் நடக்கும் ஒன்றைத் தெரிந்திருக்கும். கூடப்படிக்கும் அழகான பெண்ணுக்காக மாணவர்கள் அடித்துக்கொள்ளும் காட்சி தான் அது , அதை சால்வ் செய்வதற்க்கென்றே ஒரு பழைய மாணவரும், மிகவும் ஆடி முடித்த சித்தப்புவும் இருப்பார்கள், அது போல இப்படத்தில் ஒரு காட்சி, ”தங்கச்சி ரெண்டு பேர்ல நீ யாரை லவ் பண்றேன்னு சொல்லும்மா”!!!அண்ணங்க நாங்க பாத்துக்கறோம் என்கிறார்கள். செம நோஸ்டால்ஜியா கிளம்புகிறது.

அய்லினாக வந்த தப்ஸி மிகமிக அழகு, பெண் மனசு ஆழம் என்று சொல்லுவார்கள், பெண் மனம் மிகவும் புதிர், பேரழகனைக்கூட திரும்பிப் பார்க்காத சில பெண்கள் மிகவும் சாதாரணமாய் இருக்கும் பலருக்கு விருப்ப துணையாக அமைந்து விடுவதுண்டு, அதை நானே பல இடங்களில் பார்த்திருக்கிறேன், இதை வைத்து தான் விவேக் கூட வாடா நாமளும் நம்ம மூஞ்சியில் ஆசிட் ஊத்திக்கலாம், அப்போதான் பொண்ணுங்க நம்மையும் பார்க்கும்!!! என மின்னலேவில் லந்தாக சொலுவார். ஆகவே அய்லினுக்கு நாயகன் கருப்புவின் மீது காதல் வருவது என்னைப்பொறுத்த வரை நம்பும்படியாகத்தான் உள்ளது, தவிர பெண்களுக்கு, தனக்கு எல்லாம் தெரியும் என இறுமாந்திருப்பவனை விட தனக்கு தெரியாது என்பவனை மிகவும் பிடிக்கும் போலும், அதனால் தான் படிக்காத குடிகாரன், சேவல் சண்டை கட்டாரி தன்னிடமே காசு பிடுங்கிய கருப்புவைக் கூட காதலிக்க வைக்கிறது.

இது தவிர நான் பல்லாவரம் வெட்ரன் லைன்ஸ் [veteran lines] பகுதிகளில் பால்யத்தில் அதிகம் சுற்றியிருக்கிறேன். அங்கே ஏனைய ஆங்கிலோ இந்திய இளம்பெண்கள் ஆங்கிலோ இந்தியரல்லாத மற்ற சாதி ஆண்களையே அதிகம் விரும்பி வீட்டை எதிர்த்து வெளியேறியிருக்கிறார்கள். அவர்களையே திருமணமும் செய்து கொண்டு ஒண்டுக் குடுத்தனத்தில் கஷ்டப்பட்டுக் கொண்டு, எதாவது நிறுவனமொன்றில் டெலிபோன் ஆபரேட்டராக இருப்பர். அவர்களின் கணவன் ஒன்று சூதாடியாகவோ, குடிகாரனாக இருப்பான், அல்லது எதாவது நிறுவனத்தில் கடைநிலை ஊழியனாக இருப்பான். இதை வடசென்னையைப் பற்றி நன்கு அறிந்தவரான வெற்றிமாறன் அங்கே பெரம்பூரின் ஆங்கிலோ இந்தியக் குடியிருப்புகளில் அதிகம் புழங்கியிருப்பார் போல.அவர்களின் சமூகம் சம்பந்தப்பட்ட காட்சிகள் பக்கா.

இதை நன்கு அவதானித்து தான் அய்லின் பாத்திரத்தையும் அய்லின் கருப்பு காதலையும் உருவாக்கி சேர்த்திருக்கிறார். இதில் திணிப்பு, செயற்கை இல்லவே இல்லை என்பேன். என் நண்பன் சீனி என்பவன் தன் வீட்டுக்கு அடுத்த ஆங்கிலோ இந்திய குடித்தனப் பெண்ணான ஆண்ட்ரியா என்பவளை 15 வயதிலேயே ஃபிகர் மடித்தது, அதைப்பார்த்து நாங்கள் நமக்கு உசாராகலையேடா!!! என வயிறெரிந்தது எல்லாம் என் வாழ்விலேயே நடந்த படியால் நான் இந்தக் காதலை நம்புகிறேன்.

படத்தில் வந்த எல்லா பாத்திரங்களையுமே எழுத்தில் வடிக்க ஆசைதான் ஆனால்!!!, அது அவ்வளவு எளிதா என்ன? படத்தை ஏற்கனவே 4 முறை பார்த்தாகிவிட்டது , ஒவ்வொறு முறையும் பார்க்கையில் ஒவ்வொன்றைப் பார்க்கிறேன். குறைகள்?!!! படத்தில் குறைகள் என்று பார்த்தால் ஒன்றிரண்டு உள்ளன, அதை பெரிது படுத்தி, தானம் வந்த மாட்டை பல்பிடித்து பார்கப்போவதில்லை.நல்ல படம் வருவதே அரிது!!!

இசை, பாடல்கள் அடடா அருமையோ அருமை, ஜிவி பிரகாஷ்!!! வெகுநாளாகவே நீங்கள் சாதிக்க ஆசைகொண்டு சிறந்த பங்களிப்பை ஆற்றி வருகின்றீர்கள், ஆனால் அது இன்னும் முழுமையடையவில்லை, அது எல்லா துறையினருக்குமே விதிவிலக்கல்ல. உங்களிடம் உள்ள குறையே நீஙகள் எல்லாமாகவும் ஆக ஆசைப்பட்டு எதாகவும் ஆக முடியாமல் போவது போல், உங்களை நீங்கள் நம்பாதது தான். இப்படத்திலேயே நிறைய பாபெல், அமெர்ரோஸ் பெர்ரோஸ், 21 க்ராம்ஸ் பிண்ணணி இசை பாதிப்புகள். நிறைய அந்நிய படைப்புகள், இசைக்கோர்வைகள் சங்கீதம் கேட்கும் நீங்கள் அதை அதன் பாதிப்பை, ஒரு கொலாஜ் போல வெளிக்காட்டிவிடுகிறீர்கள், பல இடங்களில் எளிமையே அழகு, பல இடங்களில் சத்தமே தேவையில்லை, பாடல்களில் எந்த குறையுமில்லை, பிண்ணணி இசை பிரமாதமாக இருந்தும் எதற்கு எதைப் போடுவது என்ற தெரிவு இல்லை, ஆனால் அது பலவருட தவம், இந்த உங்கள் இடத்தை இளம் வயதில் அடைந்தமைக்கு பாராட்டுக்கள். இப்படத்தில் உங்கள் இசை தனுஷின், மீனாளின், அய்லினில் சிலபல வசனங்களை கபளீகரம் செய்துவிட்டது, மற்றபடி எல்லா பாடல்களும், அதற்கு அளிக்கப்பட்ட இசைப்பங்களிப்பும், குரல் தெரிவையும் மிகவும் ரசித்தேன்.

வேல்ராஜின் கேமராவைப் பற்றி சொல்லவேண்டுமானால் ஒரு பதிவு போதாது, நான் இதுவரை எந்த தமிழ் சினிமாவிலுமே இரவு ஒளிஅமைப்பில் இப்படி ஒரு ஒளிஓவியத்தை பார்த்ததில்லை,கதாபாத்திரங்களின் மீது விழும் நிலவு ஒளி, அங்கே ஏறபடுத்தும் சையோகிராஃபியை [நிழல்குத்து] உற்று நோக்குங்கள். அந்த நகாசு வேலைய ரசியுங்கள். உங்களுக்கு இந்த வேல்ராஜ் என்னும் மனிதனை பிடித்துப் போய்விடும். சந்தோஷ் சிவனின் பிஃபோர் த ரெயின்ஸ் படத்தை விட நன்றாக இருந்த ஒளிப்பதிவு. இரவு நிலவொளி வீட்டுக்குள்ளே விழுகையில் மஞ்சள் டோன் சேபியாவும்.இரவு நிலவொளி வீட்டுக்கு வெளியே விழுகையில் நீல நிற டோன் சேபியாவும் சேர்த்திருந்தார். இன்னும் சூரிய ஒளி கதாபாத்திரங்களின் மீது உண்டுபண்ணும் சயோகிராஃபியை க்ளோஸப் காட்சிகளில் மிகவும் ரசித்தேன்,ஹாட்ஸ் ஆஃப் வேல்ராஜ்.

பொல்லாதவனுக்கு அடுத்து மூன்று வருடம் தீஸிஸ் செய்து அதிரடியாய் மீள் நுழைந்து சதம் அடித்த வெற்றிமாறனுக்கு வாழ்த்துக்கள், நன்றிகள். இவரின் பேட்டி த சண்டே இந்தியனில் வெளிவந்ததை என் நண்பர் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். மிக முக்கியமான பேட்டி அது!!!! ஆகவே உங்களுக்கும் அதைப் பகிர்கிறேன். படிக்கவும்.
=====================0000=========================
இயக்குனர் வெற்றி மாறனின் பேட்டி

"என் மனோநிலையைப் பொறுத்து என் ஹீரோவை வடிவமைக்கிறேன்"
ஆடுகளத்தில் வெற்றிகரமாக ஆடிமுடித்த உற்சாகத்துடன் பேசுகிறார் இயக்குநர் வெற்றிமாறன். பாலுமகேந்திராவின் மாணவர். காற்றில் கதைகளைத் தேடாமல் மக்களின் வாழ்க்கையில் கண்டடையும் இயக்குநராக பரிணமித்திருக்கிறார். சர்வதேசப் படங்கள், இலக்கியம், எழுத்து என தனது ஈடுபாடுகள் குறித்து த சன்டே இந்தியனிடம் பேசும்போது பகிர்ந்துகொண்டார்.

நீங்கள் எப்படி சினிமாவுக்கு வந்தீர்கள். உங்களுடைய பின்னணி என்ன?

என்னுடைய அப்பா சித்திரவேல், கால்நடை மருத்துவ ஆராய்ச்சியாளர். அம்மா மேகலா சித்திரவேல், எழுத்தாளர். அக்கா டாக்டர். எனக்கு பதினைந்து வயதிலேயே சினிமா மீதான ஆர்வம் வந்துவிட்டது. ஆனால் அதை வெளிப்படுத்துகிற துணிச்சல் மட்டும் இல்லாமல் இருந்தேன். பள்ளிப்படிப்பை முடித்து லயோலா கல்லூரியில் சேரும்போதுதான், அதற்கான தருணம் வாய்த்தது. அந்த தைரியத்தை பேராசிரியர் ராஜநாயகம் கொடுத்தார். 'சினிமாதான் உன் எதிர்காலம் என்று நினைத்தால் அதில் ஈடுபடு' என்று உற்சாகமாகப் பேசினார். இந்தப் பயணத்திற்கு அவர்தான் தொடக்கம். அவரே என்னை இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராகவும் சேர்த்துவிட்டார். 1997 முதல் 2005 அதுவொரு கனாக் காலம் வரை அவரிடம் பணியாற்றினேன். 2004 ஆகஸ்டில் தனுஷ் படம் செய்யலாம் என்று சொன்னார். பொல்லாதவன் வெளியான ஆண்டு 2007 நவம்பர். வாழ்க்கையிலும் காத்திருத்தல் என்பது தொடர்ந்துவந்த சங்கடமாக இருந்தது. ஏழு ஆண்டுகள் காதலித்தேன். ஒரு படம் இயக்கிவிட்டு திருமணம் செய்துகொள்ளலாம் என்று காத்திருந்தேன். ஆனால் பையன் படம் பண்ணப் போகிறான் என்று வீட்டில் திருமண தேதியெல்லாம் குறித்துவிட்டார். படம் தள்ளிப்போனது, திருமணம் மட்டும் நடந்தது.

பாலுமகேந்திராவிடமிருந்து என்ன கற்றுக் கொண்டீர்கள். அவருடைய பாணியிலிருந்து எப்படி மாறுபடுகிறீர்கள்?

எங்களிடம் இருப்பது பாலுமகேந்திரா கற்றுக்கொடுத்த சினிமாதான். ஆனால் அதை எங்களுடைய எண்ணத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறோம். அவரிடமிருந்து வேறுபடவேண்டும் என்பதற்காகவே எந்த சினிமாவையும் எடுக்கவில்லை. அப்பாவும் நாமும் ஒன்றுதான் என்றாலும் ரேகைகள் வேறுபடுகின்றனவே. நமக்கு என்ன வருமோ அதுதான் பிரதிபலிக்கும். வளர்ப்புமுறை, சிறுபிராயத்தில் பார்த்த சினிமாக்கள், உள் மனம் எல்லாமும் சினிமா மொழியை, நாம் இயக்கும் படத்தின் உள்ளடக்கத்தைத் தீர்மானிக்கின்றன. அவருடைய உயரத்துக்கு வர முடியாது. சின்ன அளவில்தான் அவரை நாங்கள் பின்தொடர்கிறோம். நம்முடைய இயல்பு என்னவோ அதுதான் படத்தில் கதையாக வருகிறது.

தனுஷூடன் சேர்ந்தே இரண்டு படங்களை செய்துள்ளீர்கள். இருவரும் சேர்ந்தே நல்ல வளர்ச்சியை அடைந்துள்ளீர்கள். ஒரு இயக்குனராக தனுஷை எப்படி பார்க்கிறீர்கள்?

அதுவொரு கனாக் காலம் படத்திலிருந்து தனுஷூடன் பழக்கமுண்டு. அவர் ஒரு டைரக்டர் ஆர்டிஸ்ட். ஒவ்வொரு காட்சியையும் நன்கு புரிந்துகொண்டு நடிப்பார். எல்லா படங்களிலும் அவர் கற்றுக்கொண்டே போய்க்கொண்டிருக்கிறார். ஒரு இயக்குனர் சொல்வதை மட்டும் கேட்பது பெரிய விஷயமில்லை. ஆனால் நமக்கு என்ன தேவையோ, ஸ்கிரிப்ட்டுக்கு என்ன தேவையோ அதை மட்டுமே அவர் தருவார். ஒரு மில்லி மீட்டர் அளவுகூட ஸ்டார் என்பதை எந்த காட்சியிலும் வெளிப்படுத்த மாட்டார். இப்படி செய்துகொள்ளலாமா என்றும் கேட்டு காட்சிக்கு மெருகு சேர்ப்பதில் ஆர்வமாக இருப்பார். என்னுடைய மனோநிலை, உடலமைப்பு ஆகியவற்றைப் பொறுத்து என்னுடைய ஹீரோவை வடிவமைக்கிறேன். 72 மணி நேரம் நான் தூங்காமல் வேலை பார்த்துக்கொண்டே இருப்பேன். எனவே எனது படங்களில் தூங்குவது போன்ற காட்சிகளை வைக்கமாட்டேன். என்னால் இரண்டுபேரை அடிக்க முடியும். அதுக்குமேலே முடியாது என்றால் என் ஹீரோவும் அப்படித்தான். தனுஷை மனதில் வைத்துக்கொண்டுதான் கதைகளை எழுதுகிறேன். இதுவரை 5 ஸ்கிரிப்டுகள் எழுதி, 2 படங்களைத்தான் எடுத்திருக்கிறேன். வேறொருவரை வைத்து எழுத எனக்கே பயிற்சி வேண்டும். ஆடுகளம் படத்தில் பட காட்சிகளில் வெறுமனே நிற்பார்; சும்மா உட்கார்ந்திருப்பார். படம் வெளிவந்ததும் யாரைப் பற்றிப் பேசுவார்கள் என்று அவருக்குத் தெரியும்.

கமர்ஷியல் பார்முலாக்களிலிருந்து விலகி தமிழ் சினிமா, தமிழ் வாழ்க்கையை சற்று நெருக்கமாகப் பார்க்கத் தொடங்கியுள்ளது. இந்தப் போக்கு குறித்த உங்கள் கருத்தை சொல்லுங்கள்?

தமிழர்களின் அடையாளங்களை தமிழ் வாழ்வியலை கூர்ந்துப் பார்த்து படங்கள் எடுப்பது புதியதல்ல. பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆனால் சமீபத்தில் நமக்குக் கிடைக்கத் தொடங்கிய சர்வதேசப் படங்களின் பரவலான அறிமுகம் நம்முடைய அடையாளங்களைத் தேடவைத்திருக்கிறது. அது 2002 வாக்கில் நிகழ்ந்தது. இப்படி டிவிடிக்களை மக்களிடம் ஜனநாயகப்படுத்திய பர்மா பஜார் வியாபாரிகளுக்கு ஒரு படத்தை அர்ப்பணிக்கலாம் என்று நினைத்திருக்கிறேன். சில படங்களை படவிழாக்களில்தான் பார்க்கமுடியும். அவர்கள் அதையெல்லாம் எளிதாக்கிவிட்டார்கள்.
எந்த அளவு துல்லியமாக நம் மண்ணின் அடையாளங்களைச் சொல்கிறோமோ, அந்த அளவு அது சர்வதேச எல்லையைத் தொடும். சர்வதேசப் படங்கள் உள்ளே வரும்போது தன்னுடைய மண்சார்ந்த அடையாளங்களை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கம் அதிகரிக்கிறது. என் முதல் படத்தில் சென்னை வாழ்க்கையைச் சொன்னேன். அதைவிட சேவல் சண்டையின் மிகப்பெரிய பதிவாக ஆடுகளம் இருப்பதால், ஒரு சமூகத்தின் வாழ்க்கையைச் சொன்ன திருப்தி இருக்கிறது. ஆடுகளம் படத்திற்கு Ôஅமரோஸ் பரோஸ்Õ என்ற படம்தான் ஆரம்பப்புள்ளியாக இருந்தது. அதில் ஒரு நாய்ச்சண்டையின் ஊடே பல விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கும். சர்வதேசப் படங்களைத் திறந்துவிட்டதுதான் நம்முடைய வேர்களை நோக்கி பயணிக்கத் தூண்டுதலாக அமைந்தது.
ஒரு சினிமா இயக்குனர் என்பதற்கான உங்களது தனிப்பட்ட இலக்கணம் என்ன?
ஓர் உண்மையைச் சொல்வதென்றால் ஆக்ஷன், கட் சொல்வதால் மட்டும் இயக்குநராகி விடமுடியாது. ஒரு முழுமையான விழிப்புணர்ச்சியுள்ள நிலையை அடைந்து, ஒரு நல்ல படத்தை எடுத்துவிடுவேன் என்ற நம்பிக்கையில்தான் ஓடிக்கொண்டிருக்கிறோம். அதற்கான ஒரு பயணத்தில் இருப்பதாகவே உணர்கிறேன். பொல்லாதவன் படத்தில் பணியாற்றிய படக்குழுவினரை ஆடுகளம் படத்தின் மூலம் ஒரு படிமேலே உயர்த்தி வைத்திருக்கிறேன். அந்த வகையில் நாங்கள் எல்லோரும் ஒரு வளர்ச்சியைக் கண்டிருக்கிறோம்.
வாசிப்பு அனுபவம் சினிமாவுக்கு எப்படி உதவுகிறது?
இருபத்தைந்து வயதில் ஸ்கிரிப்ட் எழுதத் தொடங்கிவிட்டேன். ஒரு சராசரி வாழ்க்கையை வாழ முயற்சித்தாலும் சில நேரங்களில் அது இயலாமல் போய்விடுகிறது. ஒரு முப்பது ஆண்டு அனுபவத்தை வைத்துக்கொண்டு, அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு எப்படி கதைகள் எழுத முடியும். இரண்டு, புத்தகங்கள் என் மனப்போக்கை மாற்றியமைத்தன என்று சொல்லலாம். மங்கோலிய நாடோடிகளின் வாழ்க்கையைச் சொன்ன ஜியாங் ராங்கின் 'உல்ஃப் டோட்டம்'என்ற 600 பக்க நாவல், இருபது ஆண்டுகால வாழ்க்கையை சாறாகக் கொடுத்தது. அந்த எழுத்தாளரின் பல ஆண்டு அனுபவங்களை பத்து நாட்களில் புரிந்துகொள்கிறோம். மாணவப் பருவத்தில் படித்த அலெக்ஸ் ஹேலியின் Ôரூட்ஸ்Õ என்ற நாவல். என் வாழ்க்கையை ரூட்ஸ¨க்கு முன் பின் என்று பிரித்துக் கொள்ளலாம். ஓர் ஆப்பிரிக்க குடும்பத்தின் ஏழு தலைமுறையினரின் வலியைச் சொன்ன நூல் அது. ஒரு மனிதன் சக மனிதனை எந்த அளவுக்கு கொடுமைப்படுத்துகிறான் என்பது புரிந்தது. புத்தகங்கள்தான் உலகத்தைப் பற்றிய முழுமையை நமக்குக் கொடுக்கின்றன. சினிமாக்கள் ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றுவதில்லை. நல்ல புத்தகங்கள்தான் அதைச் செய்கின்றன. நாங்கள் ஒரு கதையை வெளிப்படுத்தும் கட்டாயத்தில் இருப்பதால், சுவைக்காக படிப்பதற்குப் பதிலாக உள்ளடக்கத்திற்காக படிக்கும் கட்டாயம் வந்துவிட்டது.

உங்களுக்குப் பிடித்த சர்வதேச, இந்திய, தமிழ், இயக்குனர்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

அகிரோ குரோசவா, அலெக்சாண்டர் கொன்சாலஸ் இனாரிட்டு, தமிழில் பாலுமகேந்திரா, மணிரத்னம்.
தமிழ் சினிமாவின் வணிகக்கூறுகளை தக்க வைத்துக்கொண்டே இயல்பான ஒரு கதையைச் சொல்கிறீர்கள். அதுதான் உங்கள் பாணியா?
ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய் முதலீடு செய்கிற தயாரிப்பாளர், முதலில் அது கிடைக்கவேண்டும் என்றுதான் நினைப்பார். அதுவும் கிடைக்காவிட்டால் தொடர்ந்து படங்கள் செய்ய முடியாது. அது நிறைவேற வேண்டும். வேறெதையும்விட சினிமா என்ற கலையில் மட்டும்தான் அறிவியலும் வணிகமும் சேர்ந்திருக்கிறது. மினிமம் கேரண்டி இல்லாவிட்டால் எப்படி அடுத்த படத்தை எடுக்க முடியும். அதற்கு உத்தரவாதம் கிடைத்துவிட்டால், நாம் என்ன நினைக்கிறோமோ அதை செய்துகொள்ளமுடியும். எனக்கு இரண்டு படவாய்ப்புகளும் அப்படித்தான் அமைந்தன. என் விருப்பங்களுக்கு குறுக்கீடாக யாருமே நிற்கவில்லை. பொல்லாதவன் படத்தில் ஒரு காமெடி காட்சியை மட்டும் விருப்பமில்லாமல் வைத்தேன்.

வஐச ஜெயபாலனை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்?

எங்களுடன் பணியாற்றிய உதவி இயக்குநர் ஹசீன்தான், கவிஞர் வஐச ஜெயபாலனை அறிமுகப்படுத்தினார். 'ஒருமுறை அவரைப் பாருங்கள். நாம் தேடுகிற கதாபாத்திரத்திற்கு அவர் சரியாக இருப்பார்' என்று சொன்னார். அவரைப் பார்த்ததும் ரொம்பவும் பிடித்துவிட்டது. நடிக்கிறீர்களா என்று கேட்டேன். உடனே சரி என்றார். பேட்டைக்காரராக உருவாக்கிவிட்டோம்.

உங்களுடைய அடுத்த ஆடுகளம் என்ன?

இன்னும் தீர்மானிக்கவில்லை. கிளவுட் நைன் நிறுவனத்திற்காக அடுத்த படத்தை இயக்குகிறேன். என்மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்திருப்பதால், ஏற்கெனவே எழுதிவைத்திருந்த கதைக்களனை மாற்றலாம் என்றிருக்கிறேன்.

சுந்தரபுத்தன்
நன்றி: http://geethappriyan.blogspot.com


...ஈழத்தின் வடபுலத்தில் ஓரூர் மட்டுவில் அதன் வரலாற்றுப் பெயர் சந்திரபுரம்.......





உலகின் எங்கோ ஓர் மூலையில் நடக்கும் அநியாயத்தைக் கண்டு உங்கள் மனம் பொங்கி எழுகின்றதா... அப்படி என்றால் நீங்களும் எனது தோழரே... சே குவேரா..

கவிதைகள்சில
~~~~~~~~~~~~~~~


To Isaipriya

My Sister,
My Mother,
My Comrade

by Karthik RM
on December 15, 2010

Many a disease plagues this world
But none so devastating
as the silence of those
that can speak.
I speak today,
I cry today,
for you. My Sister,
My Mother, My Comrade.

My Sister! With music
in your name.
The ‘isai’ of your sacrifice
like that of my other sisters
Manorama, Nilofar, Phulmoni
will be sung for ages to come
in songs of our resistance
This I promise,
your brother, a sorry being
whose only weapons
are his words.

My Mother! I was born
as your son the day
the child of your womb
was killed. Mother,
I am your son.
As I am the son of the mothers
of Eelam, Kurdistan, Palestine.
A son who seeks justice
for unheard voices,
for untold horrors,
for unspoken miseries.
A sorry being, your son,
whose only weapons
are his words.

My Comrade! I claim to live
(rather shamelessly)
for the cause you died for,
a people longing for freedom,
a soil aching for peace,
a love for life,
now facing despair,
now facing death.
As my eyes see
what has been done to you
tears pour – as words.
Words. The only weapons of
a sorry being, your comrade.
Oh dove of freedom
torn apart by vultures of lust!
Oh lamb of peace
prey to jackals of power!
Oh angel of justice!
Oh goddess of liberty!
She lies there, naked
and ravaged
by creatures called ‘men’
Disrobed was not your body,
but the farce called Lanka.
Violated was not you,
but the notion of humanity.
Raped, again and again,
was the silence
of those that can speak,
but who chose not to.
But I speak today,
I cry today.
Your sibling, your son,
your comrade.
Now a man.
Now a walking corpse.
Whose only weapons
are his words.
As of now…






தமிழீழத் தமிழச்சி

தமிழீழத் தமிழச்சி
என்பதால்
என் தாயும்
விதவையே
என் சகோதரியும்
விதவையே
என் நண்பியும்
விதவையே.....!
அன்று
கிருசாந்தியை புதைத்த போது
வாய் பொத்தியிருந்தாய்
இன்று
தர்சினியை எரித்த போது
கண் மூடியிருந்தாய்
உனது
பலதடவை
அறியாமையினால்
எம்மின தமிழ்ப் பெண்கள்
இப்ப
எம்மோடு இல்லை....!
எங்கள்
மிஞ்சியிருக்கும்
கண்மணிகளை
தமிழகத்துக்குள் ஒழித்து
வைத்தால் – அங்கையும்
கருணாநிதியின்
மோப்ப நாய்கள்
பெண்ணாய்
பிறந்த எமக்கு
ஈழத் தமிழச்சியாக வாழ....???

பா.சதீஸ்


கருவறைக் கண்ணீர்

வன்னி அகதி முகாமில் இருந்து கண்மணி

முகம் தெரியாத தாயே
உன் கருவிலிருக்கும்
கடைசி மகள் எழுதும்
கண்ணீர் கடிதம்.
உனது கருவறைச்
சுவர்களில் – எனது
சுட்டு விரல் தீட்டும்
ஓவியம் புரிகிறதா? –நீ
பிரசவித்த என்
முன்னவர்களைக் காணோமென்று
கதறும் ஒலி என்
காதுகளுக்கு கேட்கிறது.
காணமல் போன அண்ணா,
காலில்லா அப்பா,
தடுப்பு முகாமில் மூத்தவன்,
பருவ வயதில் இளையவள்
ஓட்டைக் கூடாரத்தில்
கிளிந்த துணியுடன் நீ
இதற்கிடையில்
நான் ஏனம்மா ….?


எம் தேசம்...!!!

ஊர்திகளின் ஓய்வற்ற அணிவகுப்பால்
ஊமையாய் கண்ணீர் விட்டு,,
வாடி வதங்கி போய் விட்ட நெடுஞ்சாலை...!!

நெருக்கடியும்,,நெரிசலுமாய்
நெளிகின்றது எம் தேசம்...!!
செப்பனிடப்படாத வீதிகள்..
செத்து பிழைக்கின்றன..!

புது புது இன வரவுகளால்,,
புத்துயிர் பெற்று விட்ட வீதியோர
புல்பூண்டுகள்...!!

பதரோடு, மிதிவெடியும்
பதுங்கி கிடக்கும் என்று,,,எம்மவர்
கைவிட்டு காடாகி போன
வீதியோரமெங்கும்...
கல் வைத்து தீ மூட்டி,,,
கதிரை போட்டமர்ந்து,,,
கை நனைக்கும் வேற்றின மக்கள் தொகை..
குடியிருக்கும் தமிழனை விட அதிகமாய்...!!

பூர்விகமாய் காலங்காலமாய்..
குடியிருந்த எம்முறவுகளை...
காணவில்லை...
எம்மண்ணிலே....

சுற்றுலா என்று..
சுற்றி பார்க்க வருபவர்கள்...
அநாதரவான நிலத்திலே...
அத்து மீறி நிரந்தரமாய்
குந்தி விட்டாலும்...
ஆச்சரியப்படுவதற்கில்லை...!!

ஆக்கிரமிப்பையும்
அடிமைத்தனத்தையும்
ஆசைப்பட்டு ஏற்றுக்கொண்ட இனம்
அல்லவோ எம்மினம்..!!!
அதனால் - இந்த
அத்துமீறலையும்
அன்போடு ஏற்றுக்கொள்ளட்டும்...!!

- அரசி -

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


ராஜாவே உனக்கென்றே
ராஜ்ஜியம் முழுவதுமே விழா எடுக்கப்போகின்றோம்
சுஜாதா


கோயிலுக்குப் பக்கத்தில் கார் துடைக்கக் காத்திருப்பாய்
கூட்டமுள்ள ஹோட்டலில் சாப்ட்டவுடன் ப்ளேட் எடுப்பாய்
பாயின்றிப் படுத்திருப்பாய் ப்ளாட்பாரத்தில் குளிப்பாய்
பட்டரையில் வெட்டிரும்பால் பகலிரவாய் தட்டிடுவாய்

சாயங்கால சமுத்திரத்தின் அருகில் சுண்டல் விற்பாய்
சந்துகளில் இருட்டில் பெண்களுக்காய் ஆள் பிடிப்பாய்
காஜா அடிப்பாய் கட்டடத்தில் கல் உடைப்பாய்
கார் அடியில் படுத்திருந்து கறுப்பாய் எழுந்திருப்பாய்

மேஜை துடைப்பாய் மேட்டினியில் இடிபடுவாய்
மெதுவாக என்னிடத்தில் கருப்பிலே சீட்டு விற்பாய்
கூஜா எடுத்துப்போய் குடிதண்ணீர் கொணர்வார்
கூட்டத்தில் கரைந்து பாக்கெட்டைக் கத்தரிப்பாய்

ராஜாவே உனக்கென்றே நாங்கள் இவ்வருஷம்
ராஜ்ஜியம் முழுவதுமே விழா எடுக்கப்போகின்றோம்
திரைப்படங்கள் எடுப்போம் திண்பண்டம் தந்திடுவோம்

தீவிரமாய் உன்நிலைமை உயர்த்துவது பற்றி
வரைபடங்கள் வரைந்து வாதாடிப் புகைப்பிடித்து
வருங்காலக் கனவுகளை வண்ணங்களாய்த் தருவோம்

குறைபட்டுக் கொள்ளாதே கொஞ்ச நாள் பொறுத்திரு
கூட்டங்கள் கூட்டி குளிர்சாதன அறைக்குள்
சிறைப்பட்டு சிந்தித்து சீக்கிரமே முடிவெடுப்போம்

சில்லறையாய் இல்லை போய்விட்டு அப்புறம் வா !

சர்வதேச குழந்தைகள் வருடம் அறிவிக்கப்பட்டபோது, சுஜாதா எழுதிய கவிதை இது.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


நில் கவனி
யாரிந்த முத்துக் குமார்?





குருதி வெறி கும்பல்களுக்கு
உடல் சுட்டு இன அடையாளம்
காண்பித்தவன்!

இரத்தம் சுடும் உறவிருந்தும்
ஒதுங்கி நின்ற தமிழகத்தில் -
யுத்தம் புகும் உணர்வூட்டியவன்!

தொப்புள் கொடி உறவறுத்து
ஈழத் தமிழ் இனத்திற்காய் -
தீ புகுந்து தமிழர் உள்ளம் தொட்டவன்!

யார் குற்றமும் பகிராமல்
என் போன்ற இளைஞன் குற்றமென
நெற்றி பொட்டில்
நெருப்பெய்தி அறிவித்தவன்!

தமிழர்கள் எங்கோ கொன்று குவிக்கப் படுவதை;
செய்தித் தாள், வார இதழ்,
வானொலி, தொலைகாட்சி,
இணையமெல்லாம் தலைப்பு செய்தியாகி
சூடு சொரணையோடு
எல்லோரையும் –
திரும்பிப் பார்க்க வைத்தவன்!

குடும்பத்தின் பெயர்
தேசத்தின் விலாசம்
என் மக்களின் எல்லை - ஈழம் வரையென எரிந்து
கருகி கர்ஜித்தவன்! தன் உயிர் சுட்ட
நெருப்பின் அனலில்
அவன் முகம் பொசுக்கி
நம் பனியன்களுக்கும் போஸ்டர்களுக்கும்
படம் வரைந்துக் கொள்ள –
உயிர் மை கொடுத்தவன்!

ஏது செய்தும்; என்ன செய்வோம்
ஈழம் விட்டெங்கோ சென்று -
இனி அவன் நினைவு நாளில்
மறவாமலொரு மாலை போட்டு –
நினைவு கொள்வோம்!

வித்யாசாகர்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
2010

நான்
போட்டி
பொறாமை
காட்டிக்கொடுப்பு
கட்சி
ஏற்றம்
தாழ்வு
அடிமைத்தனம்
மாற்றமில்லா பூமியில்
ஆண்டின் மாற்றமும்
அதன் வேகமும்
பிடித்தால் என்ன
பிடிக்காவிட்டால் என்றபடி
வந்தும் போய்க்கொண்டும்தான்.

இதைவிடப்
போர்
நோய்
இயற்கை என
அழிப்புக்களும் இடைக்கிடை.
வருந்தாத வருஷம் மாறியபடிதான்.

நாயும் நரியுமாய்
போட்டி போடும் அரசியலின்
நடுவில் இறைச்சித் துண்டாய்
என் இனம் என் தேசத்தில்.
பசி வறுமையோடு
இரத்தம் தோய்ந்த வருடம்
அங்கும் சிவப்பாய் வந்தபடிதான்.

என்றாலும் பனிபடர்ந்த பூமிக்குள்
என் வெப்பக் கண்ணீர் தெளித்தே
உரு(க்)கியபடி வழ்ந்துகொண்டிருக்கிறேன்.

தீபாவளி புத்தாண்டு என்றில்லாமல்
நித்தம் சிவப்பு வைனும்
ஆட்டிறைச்சியும்
முட்டையும்
சலாட்டுமாய்த் தின்று
திடமாயிருக்கிறேன்.

எப்படிச் சொல்ல நான்
என் இனத்திற்கு
"உங்களுக்கு வாழ்த்து" என்று.
வாழ்கிறார்களா அவர்கள் !!!

ஹேமா
(சுவிஸ்)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தாங்கவா
தைப்பாவாய்!


வானம் விழுந்துருகி
மாகடலும் நீராடி
மான நிலமெங்கும்
வண்டல் கரைந்தோடிக்
கானம் எடுத்துவந்து
காற்றுக் குளிர்ந்தாடித்
தேனார் வயல்மருங்கில்
செந்நெல் விளைந்தாடித்
தானம் தவமிரண்டும்
தங்கக் குலம்பாடிப்
போன தலைமுறைகள்
பொங்கிக் களித்ததெலாம்
ஈனத் தரக்கர்களால்
இன்று அழிந்ததடி
மானே வதையெல்லாம்
மாற்றவா தைப்பாவாய்!

பேயாய் அரக்கரொடும்
பிசாசுப் படைகளொடும்
தீயாய் எரிந்தநிலம்
தீம்புனல்கள் நச்சாகித்
தாயும் மடியுறங்கும்
தங்கக் குழந்தைளும்
ஆயதந்தை மைந்தர்
அறிவார்ந்த ஏந்திளையர்
தோயக் கொலையாடித்
துடிக்கச் சதிராடித்
தூய தமிழினத்தைத்
செக்கிற் புதைத்தவர்கள்
நாயாய் இருந்துலவி
நரியான வேளையிலே
தாயே மணிநிலத்தைத்
தாங்கிவா தைப்பாவாய்!

- புதியபாரதி


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தமிழ்ப்பேறு! தவப்பேறு!

தாய்மொழி என்பது தாயின்மொழி- அது
தாயும் நீயும் பேசும்மொழி
ஆயிரம் மொழிகள் நீயறிந் தாலும்
ஆன்மா உணர்மொழி அந்தமொழி – அது
அன்னையின் கருவில் வந்தமொழி!

அன்னையின் மடியில் கிடக்கையிலே – அவள்
அன்பினைப் பாலாய்க் குடிக்கையிலே
சின்னவுன் செவியில் சில்லெனப் பாய்ந்து
தேனாய் இனித்திடக் கேட்டமொழி – உன்
சிந்தையில் விதைகள் போட்டமொழி!

தோளிலும் மார்பிலும் சாய்கையிலே – நீ
தொட்டிலில் ஆடி ஓய்கையிலே
ஏழிசை மிஞ்சிடும் தாயிசை கேட்டே
இதமாய்த் தூங்கிய பாட்டுமொழி – அது
இதயங்கள் பேசிடும் வீட்டுமொழி!

அன்னையை அழைத்தே அழுகையிலே – அவள்
அணைத்ததும் உடன்நீ சிரிக்கையிலே
தன்னிலை மறந்தே தாய்மனம் பொங்கி
தவிப்புடன் உன்னைக் கொஞ்சுமொழி – அது
தரணியில் எதையும் மிஞ்சுமொழி!

தொல்லைகள் அறியாப் பருவத்திலே – நீ
துருதுருத் தாடிய உருவத்திலே
பல்லுமில் லாமல் சொல்லுமில் லாமல்
பலகதை சொல்லிய மயக்குமொழி – அது
பயிலுமுன் பேசிய இயற்கைமொழி!

உன்னுடன் இணைந்தே பிறந்தமொழி – உன்
உள்ளமும் உணர்வும் புரிந்தமொழி
எண்ணியல் என்ன மின்னியல் என்ன
எதையும் பயின்றிடச் சிறந்தமொழி – அது
இறைவன் உனக்கென வரைந்தமொழி!

தமிழினம் எய்திய பெரும்பேறு – அது
தாய்மொழி தமிழெனும் அரும்பேறு
அமிழ்தினை உரிமை அடைந்தவர் யாரும்
அருந்தா திருந்தால் அவப்பேறு – தமிழ்
அமிழ்தம் அருந்துதல் தவப்பேறு!
மலேசியப் பாவலரும்
தொல்காப்பிய அறிஞருமாகிய
கவிஞர் செ.சீனி நைனா முகம்மது அவர்கள்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அப்பா கொண்டுவந்த ஆப்பிள்

சிலகாலத்துக்கு முந்தி
அது.
அப்பம்மா சாக முதல்
சந்திரிக்காவின் காலத்தில்
கொழும்பில் இருந்து
அப்பாவுடன் வந்திருந்தது.

இலைகள் எல்லாம்
பழுப்பாக உதிர்ந்தனவாம்
அந்தக்காலத்தில்..
சொல்லுவார்கள்.

எல்லோருக்கும் போதவில்லை
ஒரு அப்பிள்.
சின்னக்கீலமாக ஓன்றும்
அம்மா கடித்ததில்
பாதியுமாக
என்பங்கு கிடைத்தது.

கொழும்பில் இருந்து
யாழ்ப்பாணத்திற்கு பயணித்திருந்தது
அந்த
சின்னச் சிவப்பு அப்பிள்.
வெட்டவே மனமில்லை எனக்கு.
நீண்டதூரம் பயணித்திருந்தும்
கம்பீரமாய்ப் பளபளத்தது.
கிளாலிக்கடலில்
சூட்டுச்சத்தத்துக்கு பயந்து
அப்பாவின்
கால்சட்டைக்குள் ஒளித்துக்கொண்டதாம் அது.

அப்பாவின் தடவலில்
அதன்
காம்பு மடங்கி நிமிர்ந்தது….

அந்தச்சேற்றுக்காட்டுப்பாதைகளில்
எல்லாம்
நிலவுடன் பேசிக்கொண்டு
அப்பா நடக்கும்போது தன் அழகை
நிலவுடன் ஒப்பிட்டு
பீற்றிக்கொண்டதாம்.

தன்
சின்ன மகனைப்பற்றி
அப்பாவின் பேச்சைக்கேட்டு
அமைதியான
வெள்ளைப்பனி கொட்டும்
தனது நாட்டைப்பற்றி
உச்சியில் தெரிந்த பராலைட்டை
உற்றுப்பார்தவாறு
ஏக்கமாக முணுமுணுத்ததாம் அப்பிள்.

தலைக்குமேல் கீச்சிட்ட
ஷெல்லி;ன் சிதறல்களிடம் தப்ப
தலைமேல் கைவைத்ததை
அதேபோல் நடித்துச்
சேட்டை செய்ததாம் அது.

தொண்டை வறண்டு
சொண்டுவெடித்த நேரங்களில்
அரோகராச்சொல்லி

உதவிசெய்ததாம் அந்த அப்பிள்.

தட்டிவானில்
சாவச்சேரி தாண்டும்போது
வானின் துள்ளலுக்கேற்ப
லயத்துடன் வந்த
அப்பிளின் பெருமூச்சு
காற்சட்டையில் வெப்பமாக படிந்ததாக அப்பா சொன்னார்.

மிஞ்சிப்போன
அப்பிளின் காம்பை
புத்தம் ஒன்றினுள் வைத்தேன்.
நெடுங்காலம்
இந்த அப்பிளின் கதையை
மக்கள் சொல்லித்திரிவார்கள்
அப்பாவுக்கு நான்
உறுதி சொன்னேன்.

ஆதாரத்திற்கு
அந்தக் காம்பு இருந்தது என்னிடம்.
இரண்டுபக்கமும் அழுத்தப்பட்டு
சப்பையாய்ப்போய்..

ஆதாரத்திற்கு
அந்தக்காம்பு இருந்தது என்னிடம்.

சேரன்கிருஷ்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஈழ சகோதரர்கள்

ஒரு சொற்ப கதறலாக இருக்கலாம்
யாருக்கும் கேட்காத அளவிற்கு
இரைச்சலாக இருக்கலாம்
அழுது வடியும் கண்ணீரின்
சோம்பல் ஒலியாக இருக்கலாம்
கைகளை நீட்டி அவர்கல் கேட்பது
நாம் வாழ்ந்துகொண்டிருக்கும்
ஒரு சராசரி வாழ்க்கையைத்தான்.










அகம் விரிகிறது
ஒவ்வொரு துளியிலும்
ஒவ்வொரு இழப்பிலும்
ஒவ்வொரு பிரிவிலும்
ஒவ்வொரு நகர்விலும்
ஒவ்வொரு கால்களிலும்
ஒவ்வொரு முதுகு மூட்டைகளிலும்
அகம் ஒரு நாடாகியிருந்தது
நான் அகதியாகிருந்தேன்

விட்டுவந்த இடங்களிலெல்லாம்
திட்டுத்திட்டாக வீடுகளும்
மனிதர்களும்

கே.பாலமுருகன்

~~~~~~~~~~~~~~~
தும்பினியின்
இடுப்பினில்
தெரியுது
தமிழீழம்














சும்மா கிடந்த நாம்..
தமிழீழ விடுதலை என்றோம்..
ஆயுதம் எடுத்து
ஆலயத்தில் கொள்ளையடித்தோம்..!
தமிழ் மக்களின் தலையினில்
நன்றே..
மிளகாய் அரைக்க கற்றுக் கொண்டோம்..!
ஆட்காட்டி
வயிறு வளர்த்தோம்..!

போகும் வழி
இடையில் மறந்தோம்..
சிங்களச் சீமையில்
சீமைப் பசுக்களிடையில்
சரணடைந்தோம்..!
தாடி வளர்த்து
கம்னீசியம் காட்டினோம்
வெள்ளை ஜிப்பாவில்
ஜனநாயகம் பேசினோம்
புலி எதிர்ப்பும்
தமிழீழ அழிப்புமே
எங்கள் அரசியலாக்கினோம்.

இன்று…
ஆக்கிரமிப்பு படைகளோடு
தும்பினியின் இடுப்பாட்டத்தில்
சதியோடு குதி போடுறோம்..
தெரியுது தமிழீழம்..
சிங்களச் சீமைப்பசுவின்
சிற்றிடையில் என்று
வாக்குக் கேட்கிறோம்.

மத்தியில் கூட்டாட்சி
மாநிலத்தில் சுயாட்சி
எல்லாம் மாய மான் விளையாட்டு..
பிரபாகரன் எனும்
பெரும் வீரன் இருந்த
பயத்தில்..
உளறித் தள்ளினோம்..!

உறுதியாய் சொல்கிறோம்..
அன்றும் இன்றும் என்றும்
எங்கள் வாழ்விடம்..
சிங்களப் பாசறை..!
அங்கே நாங்கள்
சுதந்திரப் பறவைகள்..!

முழங்குகின்றோம்..
சிங்களத்தி
தும்பினியின்
இடுப்பினில் தெரிவது
தமிழீழம் என்றே..!

வாருங்கள் தமிழ் மக்களே
புலம்பெயர்ந்த பெரு வீரர்களே..
கூடிக் கூத்தடித்து..
உணருங்கள் அவள் இடுப்பை
காணுங்கள் தமிழீழ சுகமதை..!

கூவி அழைக்கின்றோம்..
சிங்களத்தியோடு கூடி
உருவாக்குங்கள்
சிங்க – தமிழ் பரம்பரை ஒன்றை..!
அப்போதே காணலாம்
சிங்களத்தீவினில்
தமிழருக்கு ஓர்
“நிரந்தர” விடுதலை..!
அதுவரை
எப்போதும்..
புலி எதிர்ப்பே
எங்கள் தாகம்..!

http://kuruvikal.wordpress.com/

~~~~~~~~~~~~~~~
யாரு
சாகடிச்சாங்க
அவரை

அவரு செத்துட்டாருன்னு
சொல்றாங்க
அவரோட படத்தை காட்டினாங்க
அவர் மகன் செத்ததாக
சொன்னாங்க அவன் படத்தையும்
போட்டாங்க
செத்தது அவங்க இல்லைங்க
எங்களோட நம்பிக்கை
அவரு என்ன செஞ்சாருன்னு
உனக்குன்னு கேட்டாங்க
எனக்காக போராடினாருன்னேன்
நிறைய பேர கொன்னாரு
நிறைய பேருக்கு எதிரியானாருன்னு
நிறைய தப்பு செய்தாருன்னும்
சொன்னாங்க
தமிழனா பிறந்து
தமிழனுக்கு போரிடியதுதான்
பெரிய தவறோன்னு நினைக்க தோணுதுங்க
எட்டாப்புதான் படிச்சாருன்னாங்க
எத்தனை வகுப்பு அதிகம் படிச்சவந்தான்
அவரை காட்டி கொடுக்கிறானன்
என்ன செய்ய படிப்ப வச்சுங்க
அவரு இருந்தப்ப எல்லாரும்
பயந்தாங்க
என்னை அடிச்சா அவரு வருவாருன்னு
இப்ப என்னை கொன்னாலும்
யாருங்க வருவாங்க
தத்துவம் கம்யூனிசம் எதுவும்
தெரியாதுங்க அவருக்கு
ஆனா எங்களுக்கு ஒண்ணுன்னா
அவர் வருவாருன்னு
என்னோட விரோதிக்கும் தெரியுங்க
எங்களுக்கு கஞ்சி
இல்லாம போச்சு
நாதியில்லாம போச்சுங்க
பெரிய பெரிய விசயம் பேசினவங்க
ஒண்ணு மட்டும் செய்யுங்க
அவரு செஞ்சதுல கால்வாசி
செய்யுங்க
அப்பதாங்க அவர குறைசொல்ற
தகுதி வருங்க
அவரு பெரிய சண்டைகாரருங்க
கோபக்காரருங்க
அவரு ஜெயிச்சப்ப எல்லாம்
பாராட்டுனாங்க
தோத்ததும் அவர திட்டுறாங்க
இவங்கல்லாம் எதையாவது
புடுங்கட்டுங்க அவர்தான்
இல்லைன்னு சொல்றாங்களே
அப்படியே இருக்கட்டுங்க
இவங்க எதாவது செய்யட்டும்
இனிமேலாவது குறை சொல்றத
நிறுத்திபுட்டு
நிசமா சொல்றேங்க
அவரோட துவக்கு இன்னும்
இருக்குங்க
அது துரோகிகளை இன்னும்
மறக்கலைங்க
நீங்க பார்க்கதான போறீங்க
என்ன நடக்குதுன்னு
ஆனா சொல்றேங்க
ரொம்ப நாளைக்கு
நாங்க அடிவாங்க மாட்டோங்க
நாங்க அடிச்சோம்னா
அப்புறம் நீங்க இருந்த
இடமே இருக்காதுங்க
வரேங்க

--
தியாகு
கணினிப்பொறியாளர்
தமிழ்நாடு

வாயடைத்துப்
போனோம்

முருகையன்

'என் நண்பா, மெளனம் எதற்கு?'
என்று கேட்டிருந்தாய்.
வாயடைத்துப் போனோம்; வராதாம் ஒரு சொல்லும்.
'திக்' கென்ற மோதல் -
திடுக்கிட்டுப் போனோமே!

பொய் வதந்திக் கொள்ளி பொசுக்கென்று போய்ப்பற்ற
ஏற்ற வகையில்
இதமான நச்செண்ணெய்
ஊற்றி
அதில் ஊற வைத்த உள்ளங்கள் இல்லாமல்
இத்தனை தீய எரிவு நடைபெறுமா?

எத்தனை தீய எரிவு -தலையுடைப்பு,
குத்துவெட்டு, பாயும் குருதிக் குளிப்பாட்டு?

சற்று முன்னர் மட்டும் சகஐமாய்ச் சாதுவாய்ப்
பேசி இருந்த பிராணி
சடக்கென்று
வாரை இடுப்பாற் கழற்றி,
மனங்கூசாமல்
ஓங்கி விளாச ஒருப்பட்ட சிந்தையதாய்
மாறிவிட்ட விந்தை மருமம் என்ன?
சுர்ரென்று
சீறி எதிர்த்த செயலின் கருத்தென்ன?
கொள்ளை, திருட்டு, கொலைகள், கடையுடைப்பு,
பிள்ளை அரிவு, பிடுங்கல், வதை
புரிந்து
சீறி எதிர்த்த செயலின் கருத்தென்ன?

ஒன்றும் எமக்குச் சரியாய் விளங்கவில்லை.
'திக்'கென்ற மோதல் - திக்கிட்டுப் போனோம் நாம்.
வாயடைத்துப் போனோம்;
வராதாம் ஒரு சொல்லும்.

(1978 / மல்லிகை)

கவிஞராகவும், பத்திரிகையாளராகவும்,
இலக்கியவாதியாகவும் அறியப்பட்டவர்
சந்திரபோஸ் சுதாகர்.
இவர் கடந்த 16-04-2007 இரவு
சிங்களம் பேசிய ஆயுததாரிகளால்
வவுனியாவில் அவரது வீட்டில்
வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவரது கவிதை ஒன்று இங்கே


சித்திரவதைக்குப்
பின்னான
வாக்குமூலம்


உன்னை அவர்கள் கைது செய்து
எங்கோ கொண்டு சென்று விட்டார்கள்
எனது குழந்தைக்குப் பிடித்தமான
உனது 'சேட் கொலரின்' மடமடப்புச் சத்தம்
இன்னும் அவனது விரலிடுக்குகளில்
கேட்டுக் கொண்டேயிருக்கிறது
அவர்கள் வாகனங்களோடு
நட்சத்திரங்களோ, ஆட்காட்டிகளோ இல்லாத இரவையும்
சூரியனை மறைக்கவும் கூடிய ராட்சத சிறகொன்றையும்
கொண்டு வந்திருந்தார்கள்
அது
இன்னும் மிக நீண்ட காலத்தின் பின்னும்
எனது குழந்தையின் கண்களில்
எங்களுடனேயே தங்கியிருக்கிறது
அவர்களால் உன்னைத் தலைகீழாகத் தொங்கவிடவும்
நீண்ட கூரிய ஆயுதங்களால் தாக்கவும்
கொல்லவுங் கூட முடியும்
அவர்கள் பற்றிய உனது கணிப்பீட்டை
அவர்களின் துப்பாக்கிக் குழல்களும்
சப்பாத்துக்களில் பூசப்பட்ட குருதியும்
நிரூபித்து விட்டது
நிரூபித்து விட்டது
நம்பிக்கை கொள் நீ பேசாதிருக்கும் வரை
உண்மையில் நீ பேசாதிருக்கும் வரை
அவர்கள் தோற்றுப் போவார்கள் நிரந்தரமாகவே
சிறைக் கம்பியிடுக்குகளின் வழி
ரோஜாப் பூக்களின் வாசனையும்
வண்ணத்துப் பூச்சிகளின் சிறகுகளும்
உன்னை எப்போதுமே வந்தடையாதெனினும்
நம்பிக்கை கொள்
நீ பேசாதிருக்கும் வரை
அவர்கள் தோற்றுப் போவார்கள்
நிரந்தரமாகவே.

போஸ்நிஹாலே



சு.வி.....மண்ணை யாசித்த ஒரு கவிஞன்


தாயக மண்ணை நேசித்த
கவிஞர் சு. வில்வரத்தினம் அவர்கள்
9.12.2006ல் காலமானார்.
அவரது நினைவாக அவரது
கவிதை ஒன்று இங்கே.


மீண்டும்
உயிர்த்தல்


கல்லறைகள் ஒரு நாட் பெயரும்
அன்று
புதைகுழி நீத்து எம் உணர்வுகள்
உயிர்பெறும்.

சமாதி கட்டியாயிற்று என
ஒருகணம் சந்தோஷத்தோடு
சுகபாணம் அருந்திக் களித்திருப்பீர்
சிறு பொழுதே.
அதற்குள் மீண்டும்
உயிர் பெற்றெழுவோம்.

எதிர் பார்த்திருக்க மாட்டீர்
எம் உயிர்த்தெழலை
உம் திகைப்புகள்
கல்லறையாய் மாற.

முன்னொருகால்
சிலுவை தாங்கிய நாயகனின்
சுவடுகள் இன்னும் அழிந்து படவில்லை
இதோ மீண்டும் அவன்
உயிர்ச் சுவடுகளின் அரவம்
காற்றில் உயிர்க்கும்
ஆடை அசைவின் தொனி.

சிலுவையின் கீழ் அவன்
சிந்திய குருதித் துளிகள்
என்றுமே காய்ந்திலது
இதோ
இன்னும் பச்சையாக
இன்றைக்கும் சத்தியமாய்.

சிலுவையில் அறைந்தவர்களும்
எங்கேயுமல்ல
இங்கேதான் இன்னும்
உயர் பீடங்களில் இருக்கை போட்டுள்ளார்.

முள் முடி சூட்டியவர்
சவுக்கால் அடித்தவர்கள்
ஆணி அறைந்தவர்கள்
இன்னும் உள்ளார்;
இன்னும் உள்ளார்.
ஆட்சி பீடங்களில்
அதிகாரத்தோடு உள்ளார்.

அவர்களின் கொடுமையில்
சிலுவை தாங்குவோர்
சிந்தும் குருதித் துளிகள்
இன்னும் இந்தப்
பூமியை நனைக்கிறது.

ஒடுக்கு முறைக்குள்ளானோரின்
ஒவ்வொரு கல்லறையிலும்
அவர்கள் நினைப்பது போல்
உதிரம் உறைந்து விடுவதில்லை,
உட்கனன்று கொதிக்கும் அது
புதிய உருவெடுக்கும்.
2
சிலுவை ஏற்றுவோர்க்கும்
சிலுவை சுமப்பவர்க்கும்
இடையிலுள்ள முரண்பாடு
இன்று நேற்று எழுந்ததன்று.

மோதி மோதி முரண்பட்டுப் புதிது
குதிர்வது உண்மையே.
ஞானம்-அஞ்ஞானம்
தர்மம்-அதர்மம் என
ஓதிற்றே வேதம் அன்று,
அதுவேதான்.

அந்த வரலாற்றின் ஓட்டம்
என்றும் உறைந்து போவதில்லை
சிந்தும் ஒவ்வொரு வியர்வைத் துளியிலும்
குருதித் துளியிலும் உறைந்து படாமல்
உந்தி எழும் உயிரோட்டம் அதன் இயல்பு.
ஒவ்வொரு புதுத்தளமாய் அது
களம் விரிக்கும்.
தளம் உயர்த்தும்.

இன்றைக்கும் அதன்
இயல்பு உந்தல் நிகழ்வேதான்
உண்மையைப் புதைகுழிக் குட்படுத்திப்
புறம் வீற்றிருக்கும் பொய்மையின் பூச்சுகள்
பொடி உதிர இதோ
உண்மை உயிர்த் தெழுகிறது
. அஞ்ஞான இருட் பாறை
அடைப்புக்குள் அதிர்வுறவரும்
உண்மையின் வெளிப்பாடு சிலவேளை
அசிங்கமாய்ப் படலாம்,
அருவருப்பாய்த் தெரியலாம்.
அவையெல்லாம் பொய்மை சார்ந்த
பூச்சுகள் போலி மதிப்பீடுகள்.

தூண் பிளந் தெழுந்த
நரசிங்க அவதாரத்தின்
பிறாண்டல்களால் பிளவுற்று
உதிரம் வழியும் அசுரனின் வீழ்ச்சி
எழுதப்படுகிறது.
அதன் இன்றைய சாட்சியாய்
இங்கும் நிகழ்வன
புத்தெழுச்சியின் கோலமே!.....

பொத்திக்கிட்டு
போங்கடா!

'சின்னப் பசங்கள எதுக்கு கட்டாயப்படுத்தி சேக்குறாங்க' -
என்று அக்கறைப்பட்டவர்களே!
இப்போது
சின்னஞ்சிறுத் தளிர்கள்தான்
செத்துக் குவிகின்றன..
எங்கே போனீர்கள்?

'கத்தி எடுத்தவனுக்கு கத்தியாலத்தான் சாவு' -
என்ற தத்துவஞானிகளே!
இங்கு
பேனா பிடித்தப் பிள்ளைகள்தான்
பிணமாய் கிடக்கின்றன.
எங்கே போனீர்கள்?

'ஒரு அரசாங்க இராணுவம்
எப்படி தன்நாட்டு மக்களையே கொல்லுவாங்க,
சும்மா கதையளக்காத ..' -
என்னும்
அரைவேக்காட்டு அறிவுஜீவிகளே!
புரிகிறது.

இனிமேலும்
அவர்கள் அந்நாட்டு மக்களாய்
சவக்குழியில் குவியமாட்டார்கள்.
எங்கே போனீர்கள்?
இன்னமும்'
அமைதியா பேசித் தீர்க்கவேண்டியதுதான ..
'என்பீர்களேயானால்,
'பொத்திக்கிட்டு போங்கடா.'

--ஞானக்குமரன்


ஆதிக்க கூப்பாடும்,
ஆலகால
விடமும்
பாதிக்க
முடியாது


அழைக்கின்றீர்கள்…. மதிப்பளிக்கிறோம்….
மனிதம் செத்திருக்கும் அனைவரிடமும்
இன்னும் மானுடத்தை எதிர்பார்த்தபடி….
மென்மேலும் எங்களுக்குள்
இன்னல்களைச் சுமந்தபடி….
கரங்களோடு எங்கள்…
கண்ணீரையும் கட்டுப்படுத்தி… இன்னும் உங்களுக்கு மதிப்பளித்து வருகிறோம்.
உயிர் வலிகளை எடுத்துரைக்க…
உங்களின் மானுட உயிர்ப்பை அளவெடுக்க..
மென்மேலும் எங்களுக்குள்
இன்னல்களைச் சுமந்தபடி….
கரங்களோடு எங்கள்…
கண்ணீரையும் கட்டுப்படுத்தி… இன்னும் உங்களுக்கு மதிப்பளித்து வருகிறோம்.
எம் உறவு…
எம் வீடு…
எம் ஊர்…
எம் தேசம்..
எங்களுக்கானதை எம்மிடம் சேர்க்க
ஆவன செய்ய உங்களால் இயலுமா?
எங்களை நாங்களே காத்திடத் துணிந்ததை
பயங்கரவாதப் பட்டியலில் இடுகிறீர்! நசியுண்ட எறும்பும் தனைக் காக்கக் கடிக்கும்
அது உங்கள் பார்வையில் பயங்கரவாதமா?
உயிர்வலி எங்களுக்கு…
உணர்வுகளைத் தூக்கிலிட்டு
எங்கள் சாவிற்கு…
எமனுக்கு வரவெழுத எமக்கென்ன தலைவிதியா?
மறுபடியும், மறுபடியும் மரணத்தின் ஓலம்தான்
மண்ணிடையே எமக்கான விதியாக்கப்படுகிறதே.
கண்ணிருந்தும் குருடான கதை உங்களதா?
உலக நாடுகளே!
உங்கள் எவராலும் விதி மாற்ற முடிந்ததா?
தடை போட்டீர்கள்..
காரணக் கதைகள் ஆயிரம் உரைத்தீர்கள்.
அல்லைப்பிட்டி, வங்காலை, வல்லிபுனம், சம்புூரென
எள்ளி நகைக்கிறதே உங்கள் காரணங்கள்
அவை உங்களுக்குப் புரிகிறதா?
வாழ்வுக்காய் எங்கள் போராட்டம்
கொடிய கந்தக நெடியிடையே எம் வாழ்வோட்டம்
புனர் வாழ்வும் முடக்கப்படும் புூமியிலே
ஏதிலிகளாய் எம் வாழ்வும் தொடரும்
புரிகிறதா?……
அல்லது புரியாமலே இன்னும்
உண்மையொளி காணாக் குகையில்
இருள் மூடிக் கிடக்கின்றீர்களா?
கிழக்கு முகம் கறுப்பதில்லை
காலதேவன் கிறுக்கலிலே
சூரியன் இருண்டதில்லை.
கோல விளக்கொளியில் கூறுகெட்ட வாழ்வெமதல்ல..
கந்தகப் பிழம்பிடையே.. களமாடும் புதல்வர்களைக்
கொண்டெழுந்ததே எமது வாழ்வு
திசைவெளிகள் எங்கெனும் இசைவாக்கம் என்பது
எம்மினத்தின் அசையாத வாழ்வுக்கான தவம்.
உயிரெடுத்து உரம் தொடுத்த
எங்களின் தாயகத்து மண்மீட்பை…
ஆதிக்க கூப்பாடும், ஆலகால விடமும்
பாதிக்க முடியாது
ஆதலால்….
இன்னும் உங்களுக்கு மதிப்பளித்து வருகிறோம்.
உயிர் வலிகளை எடுத்துரைக்க…,
உங்களின் மானுட உயிர்ப்பை அளவெடுக்க..
மென்மேலும் எங்களுக்குள்
இன்னல்களைச் சுமந்தபடி….
கரங்களோடு எங்கள்…
கண்ணீரையும் கட்டுப்படுத்தி…
இன்னும் உங்களுக்கு மதிப்பளித்து வருகிறோம்.
-- வல்வை சகாறா.
இறந்துவிடு!

க.வாசுதேவன்

அம்மா
இனி
நீ
இறந்து
விடு.
பயமும் பட்டினியும்
நோயும் என இன்னமும்
எத்தனை காலத்திற்கு
நீ செத்துக்கொண்டேயிருக்கப்போகிறாய் ?

ஒரு தீவிலிருந்து இன்னொரு தீவிற்கும்
ஒரு நகரிலிருந்து இன்னொரு நகரிற்கும்
ஒரு காட்டிலிருந்து இன்னொரு காட்டிற்கும்
ஒரு நோயிலிருந்து இன்னொரு நோயிற்கும்
ஒரு பசியிலிருந்து இன்னொரு பசியிற்குமென
ஒரு பொதியையும் காவிக்கொண்டு
இன்னமும்எத்தனை காலத்திற்கு
அலையப் போகிறாய் ?

உன் பிள்ளைகளையும்
பேரப்பிள்ளைகளையும் கழுகுகள்
காவிக்கொண்டு செல்வதையும்
கண்டுவிட்டுத்தான் மடிவேன் என
ஏன் அடம்பிடிக்கிறாய்?

அம்மா
இனி நீ இறந்து விடு.

அனைத்தும் பயனற்றுப்
போய்விட்டது என்பதை
அறிந்த பின்தான் போகவேண்டும்
என நீ அடம்பிடிப்பது
அறிவீனம் அம்மா.

ஏழு கோடி தமிழர்கள் உலகிலிருக்கிறார்கள்
ஈழத்தில் நாம் எவ்வாறு நாம் அனாதைகளானோம்
எனக் கேட்காதே

உலகில் பன்றிகளும்தானே
பலகோடிகள் இருக்கின்றன.
அவ்வப்போ முணுமுணுத்துக் கொள்வதைத்
தவிர அவையால் என்னதான் செய்யமுடியும்?

நீ இறந்த செய்தி வந்ததும்
தயாராகவிருக்கும் இடுப்புப்
பட்டியை நான் மாட்டிக்கொள்வேன்.

சிங்களமும் மந்திரம் செபிக்கும் பன்றிகளும்
ஒருமித்துக்கூறும் அப்போ
நான் ஒரு பயங்கரவாதியென்று.

நன்றி/அப்பால்தமிழ்
பார்க்கப்
பார்க்க
இதயம்
வலிக்கிறது!


பஞ்சில் தீவைத்துக் குளிர் காயும் சிங்களமே!
பிஞ்சுக் குழந்தைகளைக் கொன்றாடும் சிறுஇனமே!
அஞ்சிப் பதுங்குபவர் அழித்தாடும் இழிஇனமே!
மிஞ்சும் உன்வெறியால் அழிந்தொழியும் உன்படையே!

தலையிலே எதுவுமின்றித் தலைமைதாங்க மடையர்களை
தலைவர் என்றுநம்பி நீயெடுத்து வணங்குகிறாய்
தலையில் மயிரோடு மூளையும் அற்றவரை
தலைகெட்ட மடஇனமே! நீ நம்பி அனுப்புகிறாய்.

காடையர் கூட்டமொன்று அன்று வந்து புரட்சியென்று
நாட்டை அழிக்கப் பார்த்த நாளையும்நீ மறந்துவிட்டு
நாட்டைப் பிழைவழிக்குள் அனுப்பிடநீ உதவு கின்றாய்
நாட்டை அழிப்பதுதான் நாட்டைக் காப்பதுவா?

ஊடகம் என்று ஒரு கும்பல் வைத்திருந்து
ஊதாரித் தனமாகப் பொய்சொல்லி ஏய்த்து விட்டால்
-'சிந்தனைச் செல்வர்' எழிலன் உலகம் மயங்கிடலாம் எனநீயும் நம்புவது
உன்கண்ணைக் கட்டிப்பகல் இரவென்றே நம்புதல்தான்.

பார்க்கப் பார்க்க எங்கள் இதயம் வலிக்கிறது
தாக்கத் தாக்க எங்கள் உள்ளம் வலுக்கிறது
தோற்கத் தோற்க உங்கள் கோழைப் படைவெறியர்
பார்க்கப் பார்க்க எங்கள் விடுதலை விரைகிறது.

இரக்கம் என்பதினி இதயத்தில் சுரக்காது
உறக்கம் உயர்தமிழர் ஒத்துழைப்பில் இருக்காது
உரத்துக் குரல்கொடுத்து உலகத்தையே அசைத்திழுத்து
உதித்தே தமிழீழம் நிமிரும்வரை ஓயாது.
-- எழிலன்

Powered by Blogger

Subscribe to
Posts [Atom]