போதையின் பிடியில் இளைஞர் சமூகம்
தற்பொழுது எம்மத்தியில் அண்மையில் சில காலமாக போதைப்பொருட்கள் என அறிந்தும் சிலர் அறியாமலும் சில பகுதி களில் இளைஞர் சமூகம் போதைப்பொருட்கள் பாவனையுடன் சம்பந்தப்பட்டுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதைக் கேள்வியுறும்போது கவலைப்பட வேண்டிய அதேவேளை, சென்ற காலங்களை விட அண்மைக்காலமாக பெரும்பான்மையான பகுதிகளில் எமது இளைஞர்கள் சிந்தித்துச் செயலாற்றும் சிறந்த புத்திசாலிகளாகப் பல பகுதிகளில் மாறி புகைத்தலையும் போதைப்பொருட்களையும் கைவிட்டு வருவதை அவதானிக்கும்போது ஏனைய புகைபிடிப்போருக்கும் போதைப்பொருட்கள் பாவிப்போருக்கும் சிறந்த பாடமாகவும் முன்மாதிரியாகவும் இருப்பதைப் போற்றாமலும் இருக்க முடியாது.
எனவே, இன்றைய இளைஞர் தினத்தில் அதுபற்றிய ஒரு விளக்கத்தை இங்கு தெளிவு படுத்துவது மிகவும் பொருத்தமாக இருக்கும்.
போதைப்பொருட்கள் பாவனையை அடியோடு இல்லாதொழிக்க வேண்டும். நாம் சிரமப்பட்டு உழைக்கும் பணத்தைப் பிரயோசனமாகப் பாவிக்காமல் விலைகொடுத்து ஏன் நோயை வாங்க வேண்டும்? மாறாக போஷாக்கான உணவுகளைச் சாப்பிட்டு நோயற்ற வாழ்க்கையை வாழ முடியுமே, மாறாக அதனால் ஏற்படும் தேவையற்ற பயங்கரமான நோய்களிலிருந்து எம் சமூகத்தை நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அதன் மூலம் தனிப்பட்டவர்களுக்கும் கிராமத்திற்கும் நாட்டிற்கும் அரசுக்கும் ஏற்படும் வீண்செலவுகளைத் தவிர்த்துக் கொள்வதற்கு எம்மால் முடியுமான பூரண ஒத்துழைப்பை நல்குவதற்கு வழிவகுக்க வேண்டும். எனவே, எதிர்கால சந்ததியினருக்கு முன் மாதிரியாக வாழ்ந்து காட்டுவோம். அனைவரும் ஆரோக்கியமான சுகதேகிகளாக வாழ திடசங்கற்பம் கொள்வோம் என நாம் முதற்கண் உறுதி பூண்டுகொள்ள வேண்டும்.
போதைப்பொருட்கள் என்று கூறும்போது ஹெரொயின்,அபின்,கஞ்சா என்பவற்றுடன் கள்,கசிப்பு,விஸ்கி,சாராயம்,பியர்,சிகரட்,
சுருட்டு, புகையிலை,பீடி போன்றவைகளைக் குறிப்பிடலாம்.
விசேடமாக புகையில் இருப்பது"காபன் மொனாக்ஸைட்' என்பதாகும். மேலும் ஒரு சிகரெட் பாவிக்கும்போது அச்சந்தர்ப்பத்தில் ஏற்படும் உஷ்ணத்தின் அளவு 900 செல்சியஸ் ஆகும். இது நீர் கொதிக்கும் உஷ்ணத்தின் அளவாகும் என்றால் எமது உடல் எந்தளவு பாதிப்பிற்கு முகங்கொடுக்கின்றது என்பதைச் சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அது மாத்திரமல்ல, சிகரெட்டில் 4 ஆயிரம் பதார்த்தங்கள் உண்டு. அதில் நச்சுப்பொருட்கள் (உடலை கொல்லக்கூடிய இரசாயனப் பொருட்கள்) 400 வகைகள் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏன் நாம் எமது உடலை இவ்வாறு வீணாக அழித்துக்கொள்ள வேண்டும்?
(சர்வதேச புகைபிடிக்கும் தினம் 2009,2010 ஆம் ஆண்டுகளில் வானொலி,தொலைக்காட்சி செய்திகளில் குறிப்பிடப்பட்ட சில முக்கியமான விடயங்களையும் நீங்கள் அவதானித்திருப்பீர்கள். என்றாலும் உங்கள் சிந்தனைக்கு மீண்டும் அவ்விடயங்களைச் சுருக்கமாக இங்கு ஞாபகப்படுத்திக்கொள்ள விரும்புகின்றேன்.)
இலங்கை ரீதியில் நோக்கும்போது
2006 ஆம் ஆண்டிலிருந்து புகைப்பிடிப்போர் தொகை குறைந்து செல்கின்றது. எனினும், புகைத்தலினால் அதிகம் பாதிப்புக்குள்ளானோர் 4,500 பேர். இதில் 50 பேர் உறுதியாக புற்றுநோயாளர்கள் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். மேலும், எமது நாட்டில் தற்பொழுதும் கூட ஒரு வருடத்திற்கு 20,000 பேர் இறந்து கொண்டும் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
உலக ரீதியில் நோக்கும்போது
தற்பொழுது 6 இலட்சத்திற்கும் அதிகமானோர் புகை பிடிக்கிறார்கள் எனவும் 3054 இலட்சம்பேர்/100 கோடி பேர் ஒவ்வொரு வருடத்திலும் இறக்கின்றனர்.
22%35% அபிவிருத்தியடைந்த நாடுகளிலுள்ளோர்.
50% அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளிலுள்ளோர்.
25 கோடி மக்கள் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளிலுள்ள பெண்கள் எனவும் அத்துடன், சிறுவர்களில் 1/2 பங்கினர் புகைப்பழக்கத்திற்குள்ளாகின்றனர். 6 செக்கனுக்கு ஒருவர் மரணமடைகின்றனர் என்ற விபரங்களைக் கேள்விப்படும்போது அதிர்ச்சியாகவும் கவலையாகவும் உள்ளதல்லவா? எனவே, இந்நிலைமையை மாற்றியமைக்கும் பொறுப்பும் சக்தியும் இன்றைய இளைஞர்கள் வசமேயுள்ளது என்பதை மனதிற்கொண்டு செயல்படக் கடமைப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலைமைக்கு இளைஞர்களையும் ஏனையவர்களையும் மாற்றியமைக்கும் சக்தி (போதைப் பொருட்கள் பாவனையை ஊக்குவிக்கும் தவறான காரணிகள்) என்ன என்பதை ஆராய்ந்து பார்க்கும்போது கேவலமான பின்வரும் போலிக் காரணங்களேயாகும். இவற்றை மாணவர்களும் வாலிபர்களும் கற்றவர்களும் கற்காதவர்களும் உணர்வதில்லை.எனவே, இந்நிலைமையை தற்பொழுது சமூகத்தின் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இளைஞர்கள்,ஏனையவர்களுக்கும் உணர்த்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
* மகிழ்ச்சி,திருப்தி,உல்லாச உணர்வு ஏற்படுகிறது என நினைத்தல்.
* பிரச்சினைகளை மறக்கலாம் என நினைத்தல்.
* நம்பிக்கை,சண்டித்தனம் ஏற்படுகிறது என ஏற்றுக்கொள்வது.
* களைப்புணர்வு இல்லாமல் போகும் என நினைத்தல்.
* பாலியல் சக்தி அதிகரிக்கும் என ஏற்றுக்கொள்ளல்.
* தனித்துவமாக இருக்கலாம் என நம்புதல்.
* படைப்பாற்றல் அதிகரிக்கும் என நினைத்தல்.
* அழகான கற்பனை உலகில் வாழலாம் எனக் குறிப்பிடல்.
* குளிரில்லாமல் போகின்றது என எண்ணுதல்.
* பசியை ஏற்படுத்துகின்றது என நம்புதல்.
நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய இப்போலியான கருத்துகளை ஏற்றுக்கொள்ளல் மூலம் போதைப்பொருள் பாவனை இனிமையான பயன் உள்ளதென ஏற்றுக்கொண்டு தவறான பாதையில் சென்று கொண்டிருக்கின்றனர்.
எனவே,இவைகளின் உற்பத்தி, சந்தைப்படுத்தல்,எடுத்துச் செல்லல், பாவனை என்பவற்றைக் குறைப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்படல் வேண்டும். மேலும் புகையிலை பயிர்ச் செய்கையினால் ஏனைய விவசாயப் பயிர்ச் செய்கைகள் பாதிப்படைகின்றன. மேலும், ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்ன என்பதையும் மக்களுக்குச் சிறந்த முறையில் உணர்த்தப்படல் வேண்டும்.
நோய் ஏற்படல்
கல்லீரலுடன் தொடர்பான சிரோசிஸ் நோய், உயர் குருதியமுக்கம்,இருதய நோய்கள்,சுவாசக் குழாய் தொடர்பான புற்றுநோய், உணவுக்கால்வாயுடன் சம்பந்தப்பட்ட புற்றுநோய் போன்றவைகள் மாத்திரமல்ல, மரணம் சம்பவித்தல், விபத்துகள் ஏற்படுதல், மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நிலைமைகள் இல்லாமல் போதல், குடும்பத்தில் பிரச்சினை உருவாதல், மனைவி மக்களின் அன்பு,ஆதரவு இல்லாமல்போதல், தமது சொத்துகள் ஏனைய செல்வங்கள் இல்லாமல் போதல், மன வளர்ச்சி தடைப்படுதல் போன்ற விபரங்களுடன் போதைப்பொருட்களின் இரசாயனத்தாக்கமும் விரும்பத்தக்கதல்ல என்ற விபரங்களையும் எடுத்துக் காண்பித்தல் மிகவும் அவசியமாகும்.
குடிப்பாவனை மூலம்
எரிவை ஏற்படுத்துகின்றது,கசப்பானது,நாற்றமுள்ளது,குமட்டக் கூடியது, உடல் பலவீனமாக உணர்வது.
புகைப்பாவனை மூலம்
இருமலை உண்டாக்கக் கூடியது,கண்ணீர் ஏற்படக்கூடியது, நகம்,பற்கள்,மஞ்சள் நிறமாகின்றது,முகத்தில் தோல் சுருக்கம் ஏற்படுகின்றது, உதடுகள் கறுப்பு நிறமாகின்றது, கசப்பானது, நாற்றமுள்ளது.
ஹெரோயின் பாவனை மூலம்
தலைசுற்றல் ஏற்படக்கூடியது, வாந்தி ஏற்படுவது போன்ற உணர்வு ஏற்படுவது,நித்திரை வருவது போன்ற உணர்வு உண்டாவது போன்ற தனக்கே வெறுப்பை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகளை உருவாக்குகின்றன என்ற கருத்துகளையும் ஒரேயொரு சிகரெட் செய்யும் பாதிப்பு என்னவென்பதையும் எடுத்துச் சொல்வது அவசிய தேவையாக இருக்கின்றது. அதாவது சுவாசப்பையினுள் விஷக்காற்றின் அளவு பொறுத்துக்கொள்ள முடியாதளவுக்கு அதிகரிக்கச் செய்யும். அப்பொழுது இரத்தம் சரியான முறையில் சுத்திகரிக்கப்படுவதில்லை. நாடி ஓட்டம் ஒரு நிமிடத்திற்கு 21 முறை அதிகரிக்கப்படுகின்றது. அதனால் உங்களை மிக விரைவில் இருதய நோயாளராக ஆக்கிக்கொள்கின்றீர்கள். உடம்பின் உஷ்ணநிலை 5 பாகை பரனைட் (94.45=89.4) குறைவடைந்து விடும். இதனால் பல்வேறு நோய்களை ஏற்படுத்தும். பக்றீரியா,வைரஸ் கிருமிகளும் இலகுவாக உடம்பினுள் செல்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கின்றது.
அதுமாத்திரமல்ல, குடும்ப வருமானத்தின் தாக்கத்தைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்கும்போது புகைக்கும் அல்லது மதுவருந்தும் பழக்கமுள்ள ஒருவர் இருக்கும் குடும்பத்தில் ஏற்படக்கூடிய வீண்செலவுகள் பற்றிப் பின்வருமாறு மதிப்பிடப்படுகின்றன. (அண்ணளவாக)
1 நாளைக்கு 5 சிகரெட்களுக்கு 20/=து5 =100/=
1 நாளைக்கு மது அருந்துவதற்கு =250/=
1 நாளைக்கு சிகரெட் மற்றும் மதுவுக்கு =350/=
1 மாதத்திற்கு சிகரெட் மற்றும் மதுவுக்கும் 350/= து30 =10,500/=
1 வருடத்திற்கு சிகரெட் மற்றும் மதுவுக்கு 10,500/= து 12 = 1,26,000/= ஆகும்.
எனவே, ஒரு வீட்டிலிருந்து ஒரு வருடத்திற்கு சிகரெட்டுக்கும் மதுவுக்கும் விரயமாகும் தொகை 1,26,000 ரூபாவாகின்றது. அவ்வாறே ஒரு கிராமியப் பொருளாதாரத்தின் மீதுள்ள தாக்கம் வீண்விரயம் (அண்ணளவாக200 குடும்பங்கள் இருப்பின்)
1 நாளைக்கு 5 சிகரெட்டுகளுக்கு 20/= து 5 =100/=
1 நாளைக்கு மது அருந்துவதற்கு 250/=
1 நாளைக்கு ஒரு வீட்டிலிருந்து 350/=
1 மாதத்திற்கு ஒரு வீட்டிலிருந்து (350து30) =10,500/=
1 மாதத்திற்கு 200 வீடுகளிலிருந்து (10,500/= து 200/=)= 21,00,000/=
1 வருடத்திற்கு 200 வீடுகளிலிருந்து (21,00,000/=து 12)= 2,52,00,000/= ரூபாவாகும்.
எனவே, 200 வீடுகளிலிருந்து ஒரு வருடத்திற்கு சிகரெட்டுக்கும் மதுவுக்கும் மாத்திரம் விரயமாகும் தொகை 2,5200000/= ஆகும் என்றால் இந்த வீண்விரயங்கள் மூலம் தனிப்பட்ட குடும்பத்தினருக்கும் கிராமத்திற்கும் நாட்டிற்கும் அரசுக்கும் ஏற்படுகின்ற வீண்விரயம் என்பதை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். நாம் விளங்கப்படுத்த வேண்டும். இப்பணத்திற்கு தனது குடும்பத்திலுள்ள எத்தனை பிரச்சினைகளைக் குறைத்துக் கொள்ளலாம்? அவ்வாறே தமது கிராமத்திலுள்ள எத்தனை அபிவிருத்தி வேலைகளைச் செய்யலாம்? அதேபோன்று எமது நாட்டின் எத்தனை குறைகளை நிவர்த்தி செய்யலாம்? மாறாக எமது பணத்தை வெளிநாடொன்றுக்கு ஏன் அனுப்ப வேண்டும்? இதுபற்றி எம் நாட்டில் வாழும் பொருத்தமற்ற இவ்வாறான வேலைகளைச் செய்வோர் சற்று சிந்தித்துப் பார்த்து உணர்ந்து இவ்வாறான செயற்பாடுகளை அடியோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். இவற்றைத் துணிச்சலோடு விளங்கப்படுத்தி சீரானதோர் செயற்பாடுகளைச் செய்ய முடியுமான ஒரே குழுவினர் இன்றைய இளைஞர்களே என்று சொல்வது மிகவும் பொருத்தமாகும். எனவே, அவர்களது சேவை முயற்சி மிகவும் அவசியமாகும்.
எனவே, இவற்றைத் தடுப்பதற்கு பின்வரும் விடயங்களைத் தனிப்பட்ட ரீதியில் மாத்திரமல்ல, இளைஞர்கள் சமூகத்தில் தனிப்பட்ட ஒவ்வொருவரும் (எல்லோரும்) ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.நிச்சயம் வெற்றி கிடைக்கும்.மேலும், போதைப்பொருட்கள் பாவிப்பவரைக் கண்டால்,
*அவர் அப்படிச் செய்தது குடித்திருந்ததன் காரணமாக என மன்னிப்பு அளிக்கக் கூடாது.
*குடித்துக் கண்டபடி நடத்தல்,பகிடி என நினைத்து நகைக்காமல் மடத்தனமான செயல் என நேரடியாகக் கூற வேண்டும்.
* பக்கத்தில் உள்ளவர் பீடி,சிகரெட்,சுருட்டு பிடித்தால் நாற்றம் என மறுப்புத் தெரிவிக்க வேண்டும்.
* சிகரெட்,மது ஆகியவற்றுக்குப் பொய்யான மதிப்பைக் கொடுக்கும் சாம்பல் தட்டுக்களையும் வெறும் போத்தல்களையும் அலங்காரப் பொருட்களாக எமது வீடுகளில் காட்சிக்கு வைக்காமல் அகற்றிவிட வேண்டும்.
* குடித்த பின் செய்வதெல்லாம் நடிப்பெனப் புலப்படுத்த வேண்டும். அதனை வெகுளித்தனமான செயல்களென சமூகம் ஏற்றுக்கொள்ளாத மடத்தனமான செயல் எனப் புலப்படுத்த வேண்டும்.
* செய்தித்தாள்களிலுள்ள சிகரெட்,மது சம்பந்தப்பட்ட விளம்பரங்களில் திருத்தங்களைச் செய்ய வேண்டும்.
* மது,சிகரெட் எனும் போதைப்பொருட்கள் சம்பந்தப்பட்ட பொய்யான நம்பிக்கைகளை வெளிப்படுத்தும்போது அவை தவறு எனச் சுட்டிக்காட்டத் தயங்கக்கூடாது.
அடுத்து புகைத்தலை கைவிட்டு விட்டால் என்ன நடைபெறும் என்பதைப் பற்றியும் தெரிந்திருப்பது அவசியமாகும். அதாவது;
புகைத்தலை கைவிட்டு விட்டால்
2 மணித்தியாலங்களுக்குள் உங்கள் குருதியில் உள்ள நிகொட்டின் அளவு இல்லாமல் போய்விடும்.
6 மணித்தியாலயங்களுக்குள் உங்கள் நாடியோட்டம் சாதாரண நிலைக்குள்ளாகிவிடும்.
2 நாட்களில் நிகொட்டினின் பக்க விளைவுகள் உங்கள் இரத்தத்திலிருந்து இல்லாமல் ஆகிவிடும். குருதியில் இருந்த விஷப்பொருள் "“காபன் மொனாக்ஸைட்' அழிந்துவிடும்.
ஓரிரு கிழமைகளானதும்
நுரையீரலில் சேர்ந்து கட்டியாகியிருந்த சளி இலகுவாகி 2 மாதங்களில பூரணமாக இல்லாமலாகிவிடும். நாவின் ருசியை உணரும் உணர்ச்சி மீண்டும் செயற்பாடடைந்துவிடும். உங்களுக்குச் சிறந்த சுகம் ஏற்படுவது போன்று நீங்கள் மீண்டும் சுகதேகியான மனிதராகவும் வாழும் சந்தர்ப்பமும் உருவாகின்றது.
எனவே, இதனடிப்படையில் சமூகத்தில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் பின்வரும் அடிப்படையில் நிகழ இளைஞர் சமூகம் முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்.
எனவே, இன்றைய இளைஞர் தினத்தில் இளைஞர்கள் மட்டுமல்ல, ஏனையவர்கள் எவராயிருப்பினும் தவறுகள் எங்கு இடம்பெறுகின்றதோ அவற்றைத் தட்டிக்கேட்டு அவைகளுக்குச் சிறந்த பரிகாரங்களைப் பெற்றுக்கொடுக்க முயல வேண்டும்.
மேற்கூறப்பட்ட தவறான விடயங்களை தவறான வழியில் இட்டுச்செல்லக்கூடிய எச்செயல்களாயிருப்பினும் (சிறுவர் துஷ்பிரயோகம்,தவறான வழியில் பாவிக்கப்படும் கையடக்கத் தொலைபேசிப் பாவனை, பெரியோர்களைக் கௌரவப்படுத்தாமை, கல்வி கற்பதில் காட்டப்படும் அக்கறையின்மை போன்ற தவறுகள்) எம் சமூகத்தின் மத்தியில் இல்லாதொழித்து மாறாக,சிறந்த செயற்பாடுகள் எம்மத்தியில் மேம்படச் செய்வதற்கும் அத்தவறுகளை வேரோடு கிள்ளியெறியவும் திடசங்கற்பம் கொள்வதுடன், எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த வழிகாட்டிகளாகவும் சிறந்த ஆரோக்கியமானவர்களாகவும் அனைவருக்கும் தம்மால் பிரயோசனமுள்ளவர்களாகவும் நாட்டிற்கு நல்ல பிரஜையாகவும் வாழ்வோமாக.
(நன்றி தினக்குரல் 16.01.11)
.jpg)
.jpg)

<< Home